சென்னை: சுயமரியாதை உணர்வையும், சமத்துவ சிந்தனையையும் மேலும்வளர்த்தெடுக்கும் விதத்தில் பயிற்சிப் பாசறை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது. நவீன தமிழகத்தின் தந்தை கருணாநிதிக்கு தமிழக அரசு சார்பில் நிறுவப்பட்ட சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்த நிகழ்வு, பெருமைக்குரிய ஒன்று. ‘தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில் என்றும் அழியாத தடத்தை விட்டுச் சென்றுள்ள உண்மையான பன்முகஆளுமை கொண்டவர் கருணாநிதி’ என்று குடியரசுத் துணைத் தலைவர் சூட்டிய புகழாரம் இன்னமும் காதுகளில் இனிமையாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கருணாநிதிமீது மாறாத அன்பு கொண்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு மனமார்ந்த நன்றி.
பேனா வடிவில் நினைவிடம்: ‘‘என்னிடம் இருந்து செங்கோலை பறித்தாலும் எழுதுகோலைஎவராலும் பறிக்க முடியாது’’ என்றுகருணாநிதி அடிக்கடி கூறுவார்.அதனால்தான் எழுதுகோல் (பேனா)வடிவில் சென்னை கடற்கரையில் தமிழக அரசு சார்பில் அவரது நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை அண்ணா சாலையில் கருணாநிதி சிலை சிதைக்கப்பட்டு, சுமார் 35 ஆண்டுகள் கழித்து அதே அண்ணா சாலையில் எந்த இடத்தில் சிலை அமைக்கலாம் என்று சிந்தித்தபோது என் எண்ணத்தில் தோன்றிய ஒரே இடம், ஓமந்தூரார்அரசினர் தோட்ட வளாகம். அங்குதான் புதிய தலைமைச் செயலககட்டிடத்தை சிறப்பான முறையில் உருவாக்கினார். நேர்த்தியாகவும், வசதியாகவும் அமைக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் திறந்து வைத்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி பங்கேற்றார்.
அருமையான அந்த தலைமைச்செயலகத்தை அரசியல் காழ்ப்புணர்வால் மருத்துவமனையாக மாற்றினாலும், கோபுரமாய் உயர்ந்து நிற்கும் அந்தக் கட்டிடத்தில் கலசமாக என்றென்றும் ஒளிர்வது கருணாநிதியின் புகழ்தான். அதனால், அண்ணா சாலையில் அமைந்துள்ள அந்த வளாகத்தில், மக்கள் பார்க்கும் வகையில் கருணாநிதி சிலை அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, இடத்தைதேர்வு செய்து கொடுத்தேன்.
இதயப்பூர்வமான நன்றி: கருணாநிதி உருவச் சிலையைஉயிரோட்டமாக வடிவமைத்த சிற்பி தீனதயாளனின் அரும்பணி பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியது. சிலை உருவாக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு ஒவ்வொரு நாளும் நேரில் சென்று பார்வையிடுவதும், சிலை அமைக்கப்படும் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் வலுவான பீடம் அமைக்கவும், சிலை அமையும் இடத்தை சுற்றிலும் பூங்கா போன்ற பசுமையை உருவாக்கவும் அவர் எடுத்துக்கொண்ட அயராத முயற்சிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருக்கும், இப்பணியில் துணையாக இருந்த பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள், துறை சார்ந்த அனைவருக்கும் நன்றி. சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி.
கருணாநிதி எப்போதும் நம்முடன் இருக்கின்ற உணர்வுடனேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அவருக்கு சொற்களால் நன்றி செலுத்துவது போதாது. கொள்கைத் திறன் மிக்க செயல்களே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான, உறுதியான நன்றி.
மதவெறி அரசியல்: அவர் ஊட்டிய உணர்வுகளை எந்த சக்தியாலும் ஒருபோதும் பறிக்க முடியாது. தமிழகம் முழுவதும் ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டங்கள்’ நடத்த வேண்டும். அமைதி தவழும் சமூக நீதி நிலமான தமிழகத்தில் மதவெறி அரசியலுக்கு துளியும் இடம் தராதவகையில், சுயமரியாதை உணர்வையும், சமத்துவச் சிந்தனையையும் மேலும் வளர்த்தெடுக்கும் விதத்தில் பயிற்சிப் பாசறை கூட்டங்கள் அமைய வேண்டும். கருணாநிதிபோல திராவிட இயக்க உணர்வுடன், அனைத்து துறைகளிலும் தமிழகம் வளம் பெற ஓயாது உழைப்போம். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.