சேலம்: சேலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த 600 காளைகளும், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம், நிலவாரப்பட்டியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். நிலவாரப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து 600 காளைகள் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்த பின்னர் போட்டி தொடங்கியது. விழா மேடை அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம், காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாதுகாப்பு ஏற்பாடு, அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி, அதனை உறுதி செய்யும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டி முழுவதையும் வீடியோ பதிவு செய்தது. விழாக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை மாடுபிடி வீரர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
ஜல்லிக்கட்டு விழாவில் பல்வேறு ஊர்களில் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. மாடுபிடி வீரர்கள் சீறி பாய்ந்து வந்த காளைகளை ஆக்ரோஷத்துடன் சென்று அடக்கினர். அதேபோல, மூர்க்கத்தனமாக பாய்ந்து வந்த பல காளைகளை மாடுபிடி வீரர்கள் கட்டுப்படாமல் முட்டி மோதி தள்ளி வேகமெடுத்து பாய்ந்து சென்றது. ஜல்லிக்கட்டு விழாவில் காளைகள் முட்டி மோதியதில் 15 மாடுபிடி வீரர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு விழா மேடை அருகே இருந்த அவசர சிகிச்சை வாகனத்தில் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ், ஏடிஎஸ்பி கென்னடி தலைமையில் 300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டு விழாவில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களால் அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு விழாவில் விலங்குகள் நலவாரிய ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அலுவலர் மிட்டல், சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.