புதுடெல்லி: `தமிழகம் உள்ளிட்ட 24 மாநிலங்களை சேர்ந்த 70,000 பெட்ரோல் பங்குகள், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை,’ என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் அனுராக் நாராயண் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஒன்றிய அரசின் கலால் வரி குறைப்பால் சில்லரை விற்பனை விலையை உடனே மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் சில்லரை விற்பனையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக ஈடு செய்ய வலியுறுத்தி இன்று ஒருநாள் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படுகிறது.மேலும், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாத லாபம் மற்றும் கமிஷன் தொகையை உயர்த்தியும் ஒன்றிய அரசின் கலால் வரி திருத்தத்தால் ஏற்பட்ட இழப்பையும் வழங்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்களுக்கும் விற்பனையாளர்கள் சங்கத்துக்கும் இடையே ஆறு மாதங்களுக்கு ஒருமுறை லாபத்தை திருத்தி அமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஆனால் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து இதுவரை உயர்த்தி வழங்கப்படவில்லை. எனவே, தமிழகம், கர்நாடக, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட அகில இந்திய அளவில் 24 மாநிலங்களில் உள்ள 70,000 பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் இன்று ஒருநாள் கொள்முதல் நிறுத்தம் செய்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.