புதுடில்லி : தலைநகர் டில்லியில், பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தலைநகர் டில்லி உட்பட வட மாநிலங்களில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில், டில்லியில் கடந்த வாரம் லேசான மழை பெய்தது. நேற்று மாலை, பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
பலத்த காற்றால் சாலையில் சென்ற வாகனங்கள் திக்குமுக்காடின. ஐஸ் கட்டிகள் வாகனங்களின் கண்ணாடியிலும், சாலையிலும் விழுந்து சிதறின. பல இடங்களில் மக்கள் அதை சேகரித்தனர். வானிலை சீராக இல்லாததால், பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. சில இடங்களில், சாலையோரத்தில் இருந்த மரங்கள் பலத்த காற்றால் வேரோடு பெயர்ந்து விழுந்தன. இதனால், கார் மற்றும் பஸ் ஆகியவை சேதம் அடைந்தன. சில சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடும் வெயிலை அனுபவித்த டில்லி மக்கள், நேற்று மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். டில்லிக்கு அருகிலுள்ள ஹரியானாவின் குருகிராம் நகரிலும் மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.
Advertisement