'திமுக தன்னை எதிர்க்கும் குரல்களை ஒடுக்குகிறது' – கார்த்திக் கோபிநாத் கைதிற்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: “திமுக தன்னை எதிர்க்கும் குரல்களை ஒடுக்குகிறது. வழக்கம் போல் போலி குற்றச்சாட்டுகள் கூறி கார்த்திக்கை கைது செய்துள்ளது” என்று யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலைர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எப்போதும்போல் அறிவாலயம் சில மிரட்டல் உத்திகளைப் பயன்படுத்தி கார்த்திக் கோபிநாத்தை முற்றிலும் போலியான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்துள்ளது. இது கண்டனத்துக்குரியது. இந்தச் செயல், திமுக அரசு தனக்கு எதிரான குரலை ஒடுக்க எந்த நிலைக்கும் செல்லும் என்பதற்கு ஓர் உதாரணம். நான் கார்த்திக் கோபிநாத்தின் தந்தையிடம் பேசினேன். பாஜக எல்லா சட்ட உதவிகளையும் செய்யும் என்று அவருக்கு நம்ம்பிக்கை கூறியுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.


— K.Annamalai (@annamalai_k) May 30, 2022

கார்த்திக் கோபிநாத் கைது ஏன்? கார்த்திக் கோபிநாத், இவர் பாஜக ஆர்வலராக அறியப்படுகிறார். தீவிர வலதுசாரி சார்புடைய அவர் தன்னை பாஜக தொண்டன், யூடியூபர் என்றெல்லாம் அடையாளம் காட்டிக் கொள்வார். அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்த போது அவரை கார்த்திக் கோபிநாத் நேரில் சந்தித்திருந்தார்.

இந்நிலையில் தான், சிறுவாச்சூர் கோயிலை மாற்று மதத்தினர் இடித்து விட்டதாக புகார் கூறியதோடு அதனை புனரைக்கப் போவதாகக் கூறினார் கார்த்திக் கோபிநாத். இதற்காக அவர் இணையதளம் வாயிலாக வசூலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆன்லைன் மூலம் ரூ.50 லட்சம் வசூலித்து மோசடி செய்துள்ளார் என்பதே கார்த்திக் கோபிநாத் மீதான புகார்.

இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல் கார்த்திக் கோபிநாத் பொதுமக்களிடம் ரூ.50 லட்சத்துக்கு மேல் வசூலித்ததாகவும், அதன் பிறகு இவர் சிறுவாச்சூர் கோயிலில் எந்த புனரமைப்புப் பணியும் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்தப் புகாரின் அடிப்படையிலேயே ஆவடி போலீஸார் இவரை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கார்த்திக் கோபிநாத் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.