திருமலை: கோடை விடுமுறையையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக தற்போது சுவாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆகிறது.
கரோனா பரவலால் பக்தர்கள் கடந்த 2 ஆண்டுகளாக சுவாமிக்கு நேர்த்திகடன் செலுத்தாமல் இருந்ததால், தற்போது விடுமுறை காலத்தில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் திருமலையில் உள்ள வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 34 அறைகளும் நிரம்பி நாராயணகிரி பகுதியில் சுமார் 2 கி.மீ தொலைவிற்கு சர்வ தரிசனத்திற்கான வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உண்ண உணவு, சிற்றுண்டி, குடிநீர், பால், மோர் போன்ற வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. ஆயினும் குழந்தையுடன் வந்த தாய்மார்கள், முதியோர், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ள பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று பக்தர்களுக்கு செய்து வரும் வசதிகளை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘விடுமுறை, கரோனா பரவலுக்கு பின்னர் சுவாமி தரிசனம் போன்றவற்றால் பக்தர்கள் திருமலையில் குவிகின்றனர். நாங்கள் பக்தர்களை வரவேண்டாம் என கூறவில்லை. அதிக கூட்டம் இருப்பதால் பக்தர்கள் பொறுமையாக சுவாமியை தரிசித்து விட்டு செல்லுங்கள் என்றே கூறினோம்’’ என சுப்பாரெட்டி தெரிவித்தார். சனிக்கிழமை 86,318 பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியல் மூலம் ரூ. 3.76 கோடி பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமராவதியில் கும்பாபிஷேகம்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆந்திர மாநில தலைநகரான அமராவதியில் புதிய பெருமாள் கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் வரும் ஜூன் மாதம் 9-ம் தேதி சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதனையொட்டி வரும்ஜூன் 6-ம் தேதி முதல் சிறப்பு ஹோமம், கலச பூஜைகள் நடைபெற உள்ளது. இதேபோன்று, ஹைதராபாத் ஹிமாயத் நகரில் கட்டப்பட்டுள்ள தேவஸ்தான பெருமாள் கோயிலில் வரும் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.