Thanjai farmers request Stalin to visit Thirutthu drain: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள திருத்துவாய்க்கால் என்ற பாசன வாய்க்கால் கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் செடி, கொடிகள் முளைத்து புதர்கள் மண்டி அவல நிலையில் காட்சி அளிக்கிறது. இந்தநிலையில், இந்த வாய்க்காலை முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர்வளத்துறையினரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான (2022-2023) தூர்வாரப்படும் வாய்க்கால்களின் பட்டியலில் இந்த திருத்து வாய்க்காலும் இடம் பெற்றுள்ளது. ஆனால் என்ன காரணத்தினாலோ இன்றுவரை ஒரு கைப்பிடி மண் கூட தூர்வாரப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்போது தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய வந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் இவ்வாய்க்காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.80 கோடி செலவில் ஆறுகள், பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரும் பணிகள் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்லணையிலிருந்து 31 கி.மீ தொலைவில் உள்ள குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரியக்கூடிய திருத்துவாய்க்கால் கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை என்கிறார் திருப்பூந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சுகுமாரன்.
“இவ்வாய்க்காலில் கடந்த 10 வருடங்களாக தூர் வாரப்படாததால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. குடமுருட்டி ஆறு பள்ளம் ஆகிவிட்டது. வாய்க்கால் மேடாகி விட்டது. காலப்போக்கில் வாய்க்காலின் அகலம் குறைந்து விட்டது. 5 மீட்டர் அகலம் இருந்த வாய்க்கால் தற்போது ஒரு மீட்டர் அகலம் கூட இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக தூர் வாரப்படாததால் இவ்வாய்க்கால் தற்போது செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது,” என்கிறார் திருப்பூந்துருத்தி சுகுமாரன்.
இவ்வாய்க்கால் முறையாக தூர்வாரப்பட்டால் மேல திருப்பூந்துருத்தி, கீழ திருப்பூந்துருத்தி, காட்டுக்கோட்டை, கண்டியூர், கரூர் ராஜேந்திரன் போன்ற வருவாய்க் கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி பாசனம் நடைபெறும். ஆனால் இவ்வாய்க்கால் கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் இக்கிராமங்களில் ஒருபோக விவசாயம் மட்டுமே நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: மதுரையில் தேங்கிய 850 டன் குப்பை: ஸ்தம்பிக்க வைத்த சுகாதார ஊழியர்கள்
இந்த ஆண்டுக்கான (2022-2023) தூர்வாரப்படும் வாய்க்கால்களின் பட்டியலில் இவ்வாய்க்காலும் இடம் பெற்றுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. மீதமுள்ள பணிகள் மே 31க்குள் முடிக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கடந்த ஒரு வாரத்திற்கு முன் அறிவித்திருந்தார். ஆனால் இன்று மே 30-ம் தேதி வரை மேற்படி வாய்க்காலில் இருந்து ஒரு கைப்பிடி மண் கூட எடுத்துப் போடப்படவில்லை என்கிறார் சுகுமாரன்.
தற்போது தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத, தண்ணீரே எட்டிப் பார்க்காத இவ் வாய்க்காலை எட்டிப் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்