திருமலை: தெலங்கானா மாநில அமைச்சர் பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில் எதிர்ப்பாளர்கள் ரகளையில் ஈடுபட்டதால், பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு அமைச்சர் ஓட்டம் பிடித்தார். அப்போது அவர் மீது நாற்காலி, தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் மல்லா ரெட்டி. மேட்சல் மாவட்டத்தில் உள்ள காட்கேசரில் நேற்று முன்தினம் மாலை ‘‘ரெட்டிகளின் சிம்ம கர்ஜனை’’ என்ற ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர்களின் பொதுகுழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ரெட்டி சமூகத்தின் கூட்டு நடவடிக்கை குழுவினருடன், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் அமைச்சர் மல்லாரெட்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரை பேச விடாமல் சிலர் இடையூறு செய்தனர். அமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள், ₹5,000 கோடியில் ரெட்டி நலவாரியம் அமைக்கும்படி வலியுறுத்தினர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், மல்லாரெட்டி பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு, அங்கிருந்து காரில் ஏறி செல்ல முயன்றார். அப்போது, சிலர் அவர் மீது நாற்காலி மற்றும் வாட்டர் பாட்டில்களை வீசினர். அமைச்சரை சுற்றி வளைத்த போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். கடும் பதற்றத்துக்கு இடையே போலீஸ் உதவியுடன் அமைச்சர் மல்லாரெட்டி பத்திரமாக அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிய சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.