பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:
செய்தியாளர் : தமிழகத்தில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டது. அதனை நீதிமன்றமே செல்லாது என்று தெரிவித்துள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு உள் ஒதுக்கீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆங்காங்கே இது போல் இட ஒதுக்கீடுகள் வருவதும், அது தள்ளுபடி செய்யப்படுவதும், அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. இது ஏன் நடக்கிறது? இதை எப்படி சரி செய்யலாம்?
இதற்கு பதில் அளித்த ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள், “உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றமோ இந்த 10.5 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து என்ன சொன்னார்கள் என்றால், அதற்கேற்ற காரணிகள் அந்த சட்டத்தில் சொல்லப்படவில்லை. இந்தப் பிரிவினர் இவ்வளவு பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி எவ்வளவு சதவீதம் கிடைக்கிறது.
20 சதவீதத்தில் அவர்கள் 5% தான் பெற்றார்களா? 7% பெற்றார்களா? ஒரு பெரிய சமுதாயமாக இருந்தும், அவர்களுக்கு அந்த பலன் போய் சேரவில்லை. அந்த காரணத்தினால்தான் உள் ஒதுக்கீடு தேவை என்பதற்கான டேட்டா இல்லை” என்று கிருபாகரன் தெரிவித்தார்.
இதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தீர்வாகுமா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
கிருபாகரன் : சாதிவாரி கணக்கெடுப்பு இடஒதுக்கீடுக்கு மட்டுமல்ல, நாம் என்ன நிலைமையில் இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த சமுதாயத்தில் பொதுவாக சொல்லலாம் ‘ஜாதி இல்லை’ என்று. உண்மை என்னவெனில், ‘பூனை கண்ணை மூடிக்கொண்டால், பூலோகம் இருண்டு போய் விடாது’ என்றுதான் சொல்ல வேண்டும்.
நரிக்குறவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கிறார்கள். இது கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத ஒரு விவகாரம். நரிக்குறவர்கள் பட்டியலின வகுப்பினரை விட பின்தங்கியுள்ளனர். அவர்களுக்கு வீடு கிடையாது, இடம் கிடையாது, எதுவும் கிடையாது. ஆனால் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர். இதை மாற்ற வேண்டும். இதை அரசியல்வாதிகள் தான் செய்ய வேண்டும். நீதிமன்றம் செய்தால்., கேள்வி கேட்கிறீர்கள்., உங்களுக்கு என்ன இதில்? என்று.
இதையே நான் இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் அதை எடுத்து இருப்பேன். அவர்களை பார்க்கும் போதெல்லாம் கண்ணீர் வரும்” என்று தெரிவித்தார்.