பிரபல பஞ்சாபி பாடகரான சித்து மூஸ் வாலா ஞாயிற்றுக்கிழமை சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது படுகொலை குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாபைச் சேர்ந்த 424 பேருக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை நேற்று முன்தினம் காவல்துறை வாபஸ் பெற்றது. அதில் சித்து மூஸ் வாலாவும் ஒருவர். சித்து மூஸ் வாலாவுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அடுத்த நாளே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் பகவந்த் மானுக்கு சித்துவின் தந்தை கடிதம் எழுதியுள்ளார். அதில், தன் மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த படுகொலை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள முதல்வர் பகவந்த் மான், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும், பஞ்சாப் ஹரியாணா நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
நடந்தது என்ன? – சினிமா பாணியில் நடந்துள்ள இந்தப் படுகொலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம்:
* சித்து மூஸ் வாலா பஞ்சாபில் மிகவும் பிரபலமான பாடகர். பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்த பிரபல பஞ்சாபி பாடகரும் ராப் பாடகருமான சித்து மூஸ் வாலா. அவருக்கு பல பணம் பறிக்கும் கும்பல்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்தன. இதில் முக்கியமான கும்பலாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கருதப்படுகிறது.
* சித்து மூஸ் வாலா கொலைக்கு இந்த கும்பல் பொறுப்பேற்றுள்ளது. இதேபோல் கனடாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கோல்டி ப்ரார் கும்பலும் இந்தக் கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது. கோல்டி ப்ரார் முன்னர் பிஷ்னோய் கும்பலில் இருந்தவராவார்.
* போலீஸ் தரப்பிலோ இந்தக் கொலை சம்பவம் கோல்டி ப்ரார், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் போட்டியின் விளைவாக நடந்துள்ளது எனக் கூறுகிறது.
* சம்பவத்தன்று சித்து மூஸ் வாலாவும் அவரது நண்பரும் ஒரு காரில் செல்ல, அவரின் தந்தை பால்கூர் சிங் இரண்டு போலீஸுடன் பின்னால் ஒரு காரில் சென்றிருக்கிறார். ஆனால், சித்து கொலை செய்யப்படும் சில நிமிடங்களுக்கு முன் பதிவான சிசிடிவி காட்சியில், அவரது காரை இரண்டு கார்கள் பின் தொடர்வது பதிவாகியுள்ளது.
அந்த இரண்டு கார்களும் யாருடையது என போலீஸார் உறுதி செய்யவில்லை. சித்துவின் தந்தை சொல்வது போல் அவரது காரும் பின் தொடர்ந்ததா என்பது உறுதிப்படுத்தவில்லை.
* இந்நிலையில், முதல்வர் பகவந்த் மான், எதற்காக சித்து மூஸ் வாலாவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
* இந்திய தண்டனைச் சட்டங்கள் 302, 307ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுதச் சட்டம் 25, 27ன் கீழும் வழக்குப் பதிவாகியுள்ளது.
* சித்து மூஸ் வாலாவின் கடைசி பாடலுக்கு அவர் தி லாஸ்ட் ரைட் (The Last Ride) என்று பெயர் சூட்டியிருந்தார். இதனைக் குறிப்பிட்டு அவரது ரசிகர்கள் பலரும், சித்துவின் கடைசி பாடல் போலவே அவரது கடைசி பயணமும் காரிலேயே முடிந்துள்ளது என்று தங்களின் வருதத்தை பதிவு செய்துள்ளனர்.