பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை: ஆம் ஆத்மி மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

பஞ்சாப்
மாநிலத்தில் முதல்வர்
பகவந்த் மான்
தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. விஐபி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தனது அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் பகவந்த் மான் கூறி வந்த நிலையில், பஞ்சாபை சேர்ந்த 424 பேருக்கு வழங்கப்பட்டு வந்து போலீஸ் பாதுகாப்பு நேற்று முன் தினம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதில் பாடகர் சித்து மூஸ்வாலாவும் ஒருவர்.

இந்த நிலையில், மான்சாவிலுள்ள தனது சொந்த கிராமமான மூசாவுக்கு, தனது நண்பர்கள் இருவருடன் காரில் சென்ற
சித்து மூஸ்வாலா
மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட மறுநாளே அவர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அம்மாநில டிஜிபி வி.கே.பன்வாரா உத்தரவிட்டுள்ளார். வீட்டிலிருந்து காரில் வெளியே சென்ற சித்து மூஸ்வாலா, பாதுகாப்புப் பணியாளர்களை தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை எனவும் குண்டு துளைக்காத வாகனத்தில் அவர் செல்லவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு ஆம் ஆத்மி அரசு மீது காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கொலை மிரட்டல் இருந்த நிலையில் அவருக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரண் சிங் சாப்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவரான மஞ்சிந்தர் சுங் சிர்சா, “பகவந்த் மான் குடும்பத்தினருக்கு தீவிர பாதுகாப்பு அளிக்கப்படும் நிலையில், எதன் அடிப்படையில் சித்து மூஸ்வாலாவின் பாதுகாப்பு அதிகளவில் குறைத்துக்கொள்ளப்பட்டது?” என கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாப்பை விலக்கிக்கொள்வது ஆபத்தானது என தான் முன்பே எச்சரித்ததாக சுட்டிக்காட்டியுள்ள அவர், பாதுகாப்பை விலக்கிக்கொள்வதுதான் அரசியல் ஸ்டன்ட்டா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சித்து மூஸ்வாலாவுக்கு மான்சா தொகுதியில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பளித்தது. ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் டாக்டர் விஜய் சிங்லாவிடம் அவர் தோல்வியை தழுவினார். சித்து மூஸ்வாலாவின் இறப்புக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நம்பிக்கைக்குரிய காங்கிரஸ் தலைவரும் திறமையான கலைஞருமான சித்து மூஸ்வாலாவின் கொலையால் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உலகம் முழுவதும் உள்ள அவரது அன்புக்குரியவர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்த ஒரு குற்றவாளியும் தப்பிக்க முடியாது என உறுதியளித்துள்ள அவர், சித்து மூஸ்வாலாவின் கொலையால் தான் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்ததாகவும், தனது இதயப்பூர்வமான அனுதாபங்களை அவரது குடும்பத்துக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.