
படு தோல்வியை சந்தித்த கங்கனா படம்
கங்கனா ரணாவத் நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் படம் தாகட். ரஸ்னீஷ் காய் இயக்கிய இந்த படம் கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படம் வரவேற்பை பெறாமல் பெரும் தோல்வி அடைந்தது. பாலிவுட் ஹங்காமாவின் பாக்ஸ் ஆபிஸ் அறிக்கையின்படி, படம் வெளியான 8ம் நாளில், வெறும் 20 டிக்கெட்டுகளை மட்டுமே விற்று, ரூ.4,420 வருவாய் மட்டுமே ஈட்டியுள்ளது.
80 கோடி முதல் 90 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.5 கோடி அளவுக்கு கூட வசூலிக்கவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதனால் படத்தை ஓடிடியில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிட தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகிறார்கள். அனேகமாக இன்னும் ஒரு வாரத்திற்குள் ஓடிடி தளத்தில் படம் வெளியாகலாம் என்று தெரிகிறது. .
படத்தின் இவ்வளவு பெரிய தோல்விக்கு காரணம் கங்கனா ரணவத்தான் என்கிறார்கள். என் படத்தை புரமோசன் செய்ய மறுக்கிறார்கள் என்று பாலிவுட் முன்னணி நடிகர்கள் மீது கங்கனா விமர்சனம் வைத்தது, அந்தந்த நடிகர்களின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் தாகட் படத்தை ரசிகர்கள் புறக்கணித்திருக்கிறார்கள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
கங்கனா துணிச்சலுடன் கருத்துக்களை வெளியிட்டு அவர் சினிமாவை தாண்டி தனியொரு சக்தியாக வளர்வதை பாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள் விரும்பவில்லை. இதனால் சில உள்ளடி வேலைகள் செய்து படத்தை மிகப்பெரிய தோல்வி படம் போன்று கட்டமைத்து விட்டார்கள் என்ற கருத்தும் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக இந்த படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு சம்பளம் எதுவும் பெறாமல் இன்னொரு படம் நடித்துக் கொடுக்க கங்கனா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.