சென்னை: சென்னை மாநகராட்சியில் குடிநீர் வழங்கல், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல துறைகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 138-வது வார்டு கவுன்சிலர் கண்ணன் பேசுகையில், “சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான சாலைகள் உரிய ஒட்டு போடப்படாமல் உள்ளன. அதேபோல், கழிவுநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றிற்கு தீர்வு காணும் வகையில், உதவிப் பொறியாளர்களுக்கு பராமரிப்பு நிதியாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்” என்றார்.
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, ‘‘சாலை ஒட்டுப்போட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர், கழிவுநீர் பிரச்சினைக்கள் குறித்து எழுத்துபூர்வமாக பதிலளியுங்கள். விரைவில், குடிநீர் வாரிய அதிகாரிகளை அழைத்து ஒரு கூட்டம் நடத்தப்படும்’’ என்றார்.
150-வது வார்டு கவுன்சிலர் ஹேமலதா, “கிராமப் பஞ்சாயத்தாக இருந்தப்போது, 812 துாய்மைப் பணியாளர்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதில் 240 பேருக்கு குடிநீர் வாரியம் பணிநிரந்தரம் செய்த நிலையில், 572 பேருக்கும் மாநகராட்சி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்றார். இதற்கு மேயர் பிரியா, ‘‘பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும்‘‘ என்றார்.
102-வது வார்டு கவுன்சிலர் ராணி, ‘‘சென்னையில் 600, 700 சதுர அடி வைத்திருப்பவர்கள் வீடு கட்ட வேண்டும் என்றால், ஐந்து அடி விட்டு கட்ட வேண்டும் அதிகாரிகள் கூறுகின்றனர். குறுகிய இடம் வைத்திருப்பவர்களால், ஐந்து அடி இடத்தை விட்டுவிட்டு, எவ்வளவு பெரிய வீட்டை கட்ட முடியும். இவர்கள் மீதான கெடுபிடிகளை மாநகராட்சி தளர்த்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ‘‘அரசின் கொள்கை முடிவுப்படி கட்டடங்கள் கட்டப்படுகிறது. கட்டடங்கள் நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக செயலாற்றி வருகிறோம். தற்போது சில மாற்றங்கள் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன்படி, குறுகிய இடம் வைத்திருப்பவர்கள், தாங்களாகவே, வரைபடம் வரைந்து சுய கையெழுப்பமிட்டு வழங்கினால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இதனால், ஏழ்மையான மக்களுக்கு எவ்வித தொந்தரவும் இருக்காது. விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படும்’’ என்றார்.
181-வது வார்டு கவுன்சிலர் விஸ்வநாதன் கூறுகையில், ‘‘மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். அங்கு போதிய அளவில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்த கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, ‘‘சென்னையில் 132 பள்ளிகளை, மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இணைக்க பள்ளி கல்வித்துறையுடன் ஆலோசிக்கப்பட்ட வருகிறது. விரைவில் அதற்கு தீர்வு காணப்படும்’’ என்றார்.
தி.மு.க., கவுன்சில் தலைவர் ராமலிங்கம், துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர், ‘‘சென்னை மாநகராட்சி, குடிநீர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உள்ளிட்ட பல்துறை அடங்கிய ஒருங்கிணைந்த குழுவை ஏற்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, மாநகராட்சி வளர்ச்சியை மேம்படுத்த முடியும்’’ என்றனர். அப்போது அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதற்கு பதலளித்த மேயர், ‘‘முதல்வரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.