கோவா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றதையடுத்து, மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார். இந்த நிலையில், பா.ஜ.க-வின் புதிய செய்தித் தொடர்பாளர்களாக 6 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ஆறு பேரும் ‘புஷ்பா’ திரைப்பட போஸில் (மை ஜுகேகா நஹி…) (நாங்கள் தலைவணங்க மாட்டோம், தக்க பதிலடி கொடுப்போம்) என எதிர்க்கட்சிகளுக்குச் சவால் விடும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் உர்ஃபான் முல்லா ஊடகங்களிடம், “எதிர்க்கட்சிகளுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். இப்போதோ அல்லது தேர்தல் நேரமோ எப்போது இருந்தாலும் சரி, அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். எதிர்ப்புகளைச் சமாளிக்க ஒவ்வொரு முறையும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அது தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, எப்போதும் நாங்கள் வளைந்து கொடுக்க மாட்டோம்” எனக் கூறினார்.
கோவாவில் சமீபத்தில் நடைபெற்ற பா.ஜ.க-வின் மாநில செயற்குழு கூட்டத்தில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், “தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் நம்மை நோக்கி கேள்வி எழுப்ப விடக்கூடாது. எனவே இப்போது தேர்தல் இல்லையே என அவர்களின் விமர்சனங்களுக்கு மௌனம் காக்க வேண்டாம். ஏனென்றால் அவர்கள் கடைசி நேரத்தில் (தேர்தலின் போது) விழித்துக் கொள்வார்கள். அவர்களுக்கு (நம்மைக் குறிவைக்க) நாம் வாய்ப்பு கொடுக்கக் கூடாது” என்று கட்சித் தொண்டர்களை அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.