பெங்களூரு: பெங்களூருவில் விவசாயிகள் தலைவர் ராகேஷ் டிகைத் மீது கருப்பு மை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய கிசான் யூனியனின் தலைவரும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவரான ராகேஷ் டிகைத், விவசாயிகள் போராட்டத்தில் கர்நாடக விவசாயி ஒருவர் பணம் கேட்டு பிடிபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பேசுவதற்காக பெங்களூருவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ராகேஷை டிகைத் மீது ஒருவர் மைக்கால் தாக்க முற்பட்டார். மற்றொருவர் தன்னிடம் இருந்த இங்க் மூலம் தாக்கினார். இதனால் கூட்டத்தில் பதற்றம் நிலவியது. ராகேஷின் ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட்டனர்.
இந்தத் தாக்குதல் குறித்து ராகேஷ் டிகைத் கூறும்போது, “செய்தியாளர் சந்திப்பு நடத்திக் கொண்டிருந்தபோது சிலர் வந்து அங்கிருந்த மைக்குகளால் எங்களை அடிக்க ஆரம்பித்தனர். இம்மாதிரியான சம்பவம் கர்நாடக அரசு மற்றும் காவல்துறைக்கு பெரும் தோல்வி. இது ஒரு சதி, இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.
#WATCH Black ink thrown at Bhartiya Kisan Union leader Rakesh Tikait at an event in Bengaluru, Karnataka pic.twitter.com/HCmXGU7XtT
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், ராகேஷை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விவரம் கேட்டறிந்தார்.