புதுடெல்லி: கரோனாவால், பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்ட பலன்களை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று வழங்குகிறார்.
கரோனாவால் பெற்றோர், பாதுகாவலர், தத்து பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத் திட்டம் கடந்தாண்டு மே-29ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 2020 மார்ச் 11-ம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கரோனா பாதிப்பால் பெற்றோர், பாதுகாவலர், தத்து பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் பாஸ்புக், ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழான சுகாதார அட்டை ஆகியவை இந்நிகழ்ச்சியில் இன்று வழங்கப்படும்.
கரோனா பாதிப்பால் ஆதர வற்ற குழந்தைகளாக மாறியவர் களுக்கு, விரிவான பாதுகாப்பை அளிப்பது, கல்வி மற்றும் கல்வி உதவித் தொகை மூலம் மேம்படுத்துவது, 23 வயதை எட்டும் போது ரூ.10 லட்சம் நிதியை பெற்று தற்சார்புடையவர்களாக ஆக்குவது, சுகாதார காப்பீடு மூலம் அவர்களின் நலனை உறுதி செய்வது இத்திட்டத்தின் நோக்கம் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் தங்களின் பாதுகாவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆட்சியர், அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும்எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வர்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் ஆதரவற்ற குழந்தை களாக மாறியவர்களுக்காக pmcaresforchildren.in என்ற இணையதளமும் உருவாக்கப் பட்டுள்ளது. இதில் இந்த குழந்தைகளை பதிவு செய்து இத்திட்டத்தின் பலன்களை பெற முடியும். -பிடிஐ