மதுரை- தேனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் போக்குவரத்தில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை – தேனி- மதுரைக்கு ரயில் பயண நேரம் கூடுதல் ஆகியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பின் மதுரையிலிருந்து தேனிக்கு முன்பதிவில்லா தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை கடந்த 26ஆம் தேதி சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். அதன்படி மதுரையில் இருந்து தேனிக்கு தினசரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் போக்குவரத்து கடந்த 27-ஆம் தேதி துவங்கியது. தென்னக ரயில்வே அட்டவணைப்படி காலை 8.30 மணிக்கு 12 பெட்டிகளுடன் கிளம்பிய பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, நிறுத்தங்களில் நின்று காலை 09.35 மணிக்கு தேனியை வந்தடைந்தது.
அதே போல் மாலை 6.15 மணிக்கு தேனியில் இருந்து கிளம்பும் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி நிறுத்தங்களில் நின்று மாலை 07.35 மணிக்கு மதுரை சென்றடைந்தது. இந்நிலையில் மதுரை – தேனி ரயில் கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. புதிய அட்டவணைப்படி மதுரை – தேனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06701) மதுரையில் இருந்து காலை 08.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை 08.05 மணிக்கு புறப்பட்டு வழக்கமான நேரப்படி காலை 09.35 மணிக்கு தேனி சென்றடையும்.
மறு மார்க்கத்தில் தேனி – மதுரை முன்பதில்லாத விரைவு சிறப்பு ரயில் (06702) தேனியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்பட்டு வழக்கமான வருகை நேரமான இரவு 07.35 மணிக்கு பதிலாக இரவு 07.50 மணிக்கு 15 நிமிடம் தாமதமாக மதுரை வந்து சேரும். அந்தவகையில் மதுரை -தேனி, மதுரை ரயில் பயண நேரம் அதிகமாகி உள்ளது. மதுரை – தேனி – மதுரை ரயில்கள் கால அட்டவணை மாற்றம், வரும் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM