நாடாளுமன்ற மாநிலங்களவை பாஜக வேட்பாளர்கள் பட்டியலில், மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பெயர் இடம் பெறாததால், அவரது அமைச்சர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், தெலங்கானா உட்பட 15 மாநிலங்களில், காலியாக உள்ள 57 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு, வரும் ஜூன் மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாளாகும். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
இதன்படி நேற்று, நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட உள்ள 18 வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சி டெல்லி மேலிடம் வெளியிட்டது. அதன்படி, கர்நாடக மாநிலத்தில் இருந்து, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்வு செய்யப்பட உள்ளார். இதே போல், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயல், மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார்.
11 இடங்கள் காலியாக உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து 6 பேர் மட்டுமே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்காக கோரக்பூர் தொகுதியை விட்டுக் கொடுத்த ராதா மோகன் அகர்வாலுக்கு, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜக கொடுத்துள்ளது.
இதற்கிடையே, மத்திய அமைச்சர் மற்றும் பாஜக மூத்தத் தலைவர்கள் பலருக்கு, அக்கட்சி மேலிடம் மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகி, மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக உள்ள முக்தார் அப்பாஸ் நக்விக்கு, பாஜக மேலிடம் மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. இதன் மூலம் இவரது அமைச்சர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மூத்தத் தலைவர்கள் ஓ.பி.மாத்தூர், வினய் சஹஸ்த்ரபுத்தே, பாஜக பொதுச் செயலாளர் துஷ்யந்த் கௌதம் ஆகியோருக்கு ராஜ்யசபா சீட் மீண்டும் வழங்கப்படவில்லை. மாநிலங்களவையில் பாஜகவின் தலைமைக் கொறடாவும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிவபிரதாப் சுக்லாவும் பாஜக மேலிடம் மீண்டும் வாய்ப்பு தரவில்லை. மூத்தத் தலைவர்கள் பலரை பாஜக ஓரங்கட்டி உள்ளதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.