புதுடெல்லி: தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பிவைத்த தஞ்சை தாரகைகள் மகளிர் சுயஉதவிக் குழுவினரை, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த மாதத்துக்கான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது. சில தினங்களுக்கு முன்பு நம்நாடு புதிய சாதனை படைத்திருக்கிறது. கிரிக்கெட் போட்டியில் நம்வீரர்கள் சதம் அடித்தால் நீங்கள்அனைவரும் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆனால், இந்தியா மற்றொரு துறையில் சதம் அடித்துள்ளது. கடந்த 5-ம் தேதி நம் நாட்டின் யூனிகார்ன்கள் எண்ணிக்கை 100-ஐ தொட்டது. ஒரு யூனிகார்ன் என்பது ரூ.7,500 கோடி மதிப்புள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். மொத்த யூனிகார்ன்களின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் கோடியாகும். இது இந்தியர்களுக்கு பெருமை தரும் விஷயமாகும்.
இதில் 44 யூனிகார்ன்கள் கடந்த ஆண்டில் உருவானவை ஆகும். அதாவது, உலகளாவிய கரோனா பெருந்தொற்று காலத்திலும் நமது ஸ்டார்ட்-அப்கள் செல்வத்தையும் மதிப்பையும் உருவாக்கி வருகின்றன.
ஸ்ரீதர் வேம்பு: தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர்வேம்பு அண்மையில் பத்ம விருது பெற்றார். அவரும் ஒரு வெற்றி பெற்ற தொழில்முனைவோர் ஆவார். மேலும் பல தொழில்முனைவோரை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். ஸ்ரீதர், கிராமத்தில்தான் தனது பணியை தொடங்கினார். தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்தபடியே சாதிக்க முடியும் என கிராமப்புற இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
தஞ்சாவூர் பொம்மை: சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த சுயஉதவிக் குழுவினர் எனக்கு ஒரு பரிசை அனுப்பினர். அது ஒருசிறப்பான தஞ்சாவூர் பொம்மை. புவிசார் குறியீடு பெற்ற அந்த பரிசை எனக்கு அனுப்பிய தஞ்சாவூர் சுயஉதவிக் குழுவினருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தஞ்சாவூர் சுயஉதவிக் குழுக்கள், தங்கள் தயாரிப்புகளை விற்கஅங்குள்ள முக்கிய பகுதிகளில் ஒரு அங்காடியையும், சிறுகடைகளையும் திறந்திருக் கிறார்கள். அதற்கு ‘தாரகைகள் கைவினைப் பொருட்கள் விற்பனை அங்காடி’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த முயற்சியில் 22 சுயஉதவிக் குழுக்கள் இணைந்திருக்கின்றன. இவர்கள் தஞ்சாவூர் பொம்மை, வெண்கல விளக்கு போன்ற புவிசார் குறியீட்டுப் பொருட்களைத் தவிர, பிற பொம்மைகள், தரைவிரிப்புகள், செயற்கை நகைகள்ஆகியவற்றையும் தயாரிக்கிறார்கள். இதன் காரண மாக கைவினைஞர்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களின் வருவாயும் அதிகரிப்பதால் அவர்களுக்கு அதிகாரப் பகிர்வும் கிடைக்கிறது. மக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் செயல்படும் சுயஉதவி குழுக்களைக் கண்டறிந்து அவர்களின் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
இதனால் சுயஉதவிக் குழுவினரின் வருவாய் அதிகரிப்பதுடன் சுயசார்பு இந்தியா பிரச்சாரத்துக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கும்.
கர்நாடகாவில் நடந்த 10-ம் வகுப்பு தேர்வில் கல்பனா என்ற மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை கன்னட மொழி தெரியாது. இருந்தாலும், 3 மாதங்களில்அதை கற்றுக் கொண்டு தேர்வில் 92 மதிப்பெண் பெற்றுள்ளார். உத்தராகண்டைச் சேர்ந்த இவர்,முன்பு காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 3-ம் வகுப்பு படிக்கும்போது பார்வையை இழந்தார். இவருக்கு மைசூருவைச் சேர்ந்த பேராசிரியர் தாராமூர்த்தியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் அளித்தஊக்கத்தாலும் தனது கடின உழைப்பாலும் கல்பனா நமக்கெல்லாம் உதாரணமாக விளங்குகிறார். அவருக்கு வாழ்த்துகள்.
சார்தாம் யாத்திரையில் தூய்மை: உத்தராகண்டில் சார்தாம் யாத்திரை நடந்து வருகிறது. சிலபக்தர்கள் குப்பைகளை ஆங்காங்கே போடுவதாக சக பக்தர்கள் சமூக வலைதளங்களில் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்தப் புகார்களுக்கு மத்தியில் சிலர் தூய்மைப் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதுதவிர, தன்னார்வ அமைப்புகளும் தூய்மைப் பணியில் ஈடுபடுகின்றன. புனிதத் தலங்கள் தூய்மையாக இருக்க யாத்ரீகர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். வரும் ஜூன் 5-ம் தேதிசுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட உள்ளது. மக்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க தங்களால் ஆன முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
ஜூன் 21-ம் தேதி 8-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு ‘மனிதசமூகத்துக்காக யோகா’ என்றகருப்பொருளுடன் கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தை அனைவரும் உற்சாகமாக கொண்டாட வேண்டும்.
சில தினங்களுக்கு முன்பு ஜப்பான் சென்றிருந்தேன். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடுவே, சிறந்த மனிதர்கள் சிலரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் ஜப்பானியர்களாக இருந்தாலும், இந்தியாவுடன் தொடர்பு உடையவர்களாக உள்ளனர். இதில் ஒருவரான ஹிரோஷி கோய்கே என்பவர் பிரபலமான கலை இயக்குநர். இவர் மகாபாரத நிகழ்ச்சியை இயக்கி உள்ளார். கம்போடியாவில் இந்த தொடர் கடந்த 9 ஆண்டுகளாக தொடர்கிறது.
சமூக சேவகர்: ஆந்திர மாநிலம் மர்க்காபுரத்தைச் சேர்ந்த ராம் புபால் ரெட்டி, தனது ஓய்வுக்கு பிந்தைய வருவாய் முழுவதையும் பெண் கல்விக்கு வழங்கி உள்ளார். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 100 பெண் குழந்தைகள் பெயரில் வங்கியில் கணக்கு தொடங்கி அதில் ரூ.25 லட்சத்தை முதலீடு செய்துள்ளார்.
அர்ப்பணிப்பு மனப்பான்மை இருந்தால் தனி மனிதர்கூட ஒட்டுமொத்த சமுதாயத்தின் எதிர்காலத்தை மாற்ற முடியும் என்பதை உணர்த்துவதாக இந்த சம்பவம் உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.