கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிடச் சென்ற மாணவர்களை, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர்.நம் அண்டை நாடான இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, கொழும்புவில் உள்ள அவர் அலுவலகத்திற்கு முன், 50 நாட்களுக்கு மேலாக ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான மாணவர்கள், கோத்தபய ராஜபக்சேவின் வீட்டை முற்றுகையிட திரண்டு சென்றனர். அவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைந்து போகச் செய்தனர்.
பலர் தங்கள் மீது வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை, போலீசார் மீது திருப்பி எறிந்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நாட்டு மக்களிடம் ‘டிவி’யில் உரையாற்றினார். அப்போது அவர், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க, 15 குழுக்கள் அமைக்க உள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள நான்கு இளைஞர்களிடம், நான்கு குழுக்களின் தலைமைப் பொறுப்பை வழங்க விரும்புவதாகவும் கூறினார்.
உலக வங்கி நிதியுதவி
இலங்கைக்கு 5,250 கோடி ரூபாய் நிதி வழங்க, உலக வங்கி திட்டமிட்டுள்ளது. அதுபோல பன்னாட்டு நிதியமும் இலங்கை அரசுக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளது. இத்தொகை வாயிலாக இலங்கை அரசு தற்போதுள்ள கடன்களை திரும்பத் தந்து, ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement