சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலர் ஆர்.தர்மர் ஆகியோர் இன்று (மே 30) தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அதிமுக எம்,பிக்களான நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக் காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. அதனால் தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாகும் 57 எம்.பிக்கள் இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலர் ஆர்.தர்மர் ஆகியோர் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலின் போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.