சென்னை: டெல்லியிலிருந்து நேற்று சென்னை வந்த கார்த்தி சிதம்பரம், விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சோதனை என்பது எனக்குப் புதிதல்ல. 6 முறை சோதனை நடத்தி, எதைக் கண்டுபிடித்தார்கள். இந்தியாவில் இதுவரை யாரையும் 6 முறை சோதனை செய்ததில்லை.
என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் உண்மை எதுவுமில்லை. புலன் விசாரணை என்ற பெயரில், எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் முயற்சிதான்.
என்னிடம் 27 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். என்ன கேள்வி கேட்டனர் என்பதை சிபிஐ வெளியிடாமல் இருப்பது ஏன்? விசாரணையை நேரலை செய்ய வேண்டும்.
மாநிலங்களவையில் எனது தந்தை ப.சிதம்பரம் முன்வைக்கும் வாதங்களை அவர்களால் எதிர்கொள்ள முடியாமல், என்னைக் குறிவைத்து சிபிஐ மூலம் சோதனை நடத்துகின்றனர்.
நான் சசிதரூர் தலைமையிலான பாராளுமன்றத் தகவல் தொழில்நுட்பக் குழுவில் இருக்கிறேன். அது தொடர்பான ஆவணங்களை வைத்திருந்தேன். சோதனையின்போது அதை எடுத்துச் சென்றனர்.
2011-ம் ஆண்டு நடைபெற்றநிகழ்வுக்கும், இந்த ஆவணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எங்களை அலைக்கழிக்கவே இப்படி சோதனைகளை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.