பிரபல பஞ்சாப் பாப் பாடகர் சித்து மூஸ் வாலா மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் எந்த ஒரு குற்றவாளியும் தப்பிக்க முடியாது என உறுதியளித்துள்ளார் அம்மாநில முதல்வர் பகவந்த் மான்.
பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாப் பாடகர் சித்து மூஸ் வாலா (28). இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சித்து மூஸ் வாலா காங்கிரஸ் கட்சியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இணைந்தார். அண்மையில் நடைபெற்று முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் மான்சா தொகுதியில் போட்டியிட்ட இவர் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், இம்மாநிலத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை வாபஸ் பெற்று வருகிறது. நேற்று முன்தினம் 420 விஐபிக்களின் பாதுகாப்பை வாபஸ் பெறுவதற்கான உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்தது. இதனால், சித்து மூஸ் வாலாவுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், மான்சா மாவட்டத்தில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது சித்து மூஸ் வாலாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரும், அவருடன் இருந்த 2 பேரும் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சித்து மூஸ் வாலா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் அவரது ரசிகர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
சித்து மூஸ் வாலா படுகொலைக்கு இரங்கல் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அவரது ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “சித்து மூஸ் வாலாவின் கொடூரமான கொலையால் நான் அதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளேன். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க மாட்டார்கள். அவரது குடும்பத்தினர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் சித்து மூஸ்வாலா உயிரிழ்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் மூஸ் வாலாவுக்கு எதற்காகப் பாதுகாப்பு நீக்கப்பட்டது என்பதை மாநில அரசும், முதல்வரும் தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதையும் படிக்கலாம்: பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை – பாதுகாப்பு விலக்கப்பட்ட அடுத்தநாள் பயங்கரம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM