ராஜ்ய சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு இடத்தில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட ப.சிதம்பரம் நாளை (மே 30) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரின் பதவிக் காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. இதையொட்டி, இந்த பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதில், தமிழ்நாட்டில் ராஜ்ய சபா எம்.பி பதவிக்கான 6 இடங்கள் காலியாகி உள்ளது. ஒரு ராஜ்ய சபா உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பதால், திமுக கூட்டணிக்கு 4 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்கும். இதில், திமுக சார்பில், தஞ்சை கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் ராஜ்ய சபா எம்.பி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 1 இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 1 இடத்துக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பும் குழப்பமும் நிலவியது. மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.யாக இருந்த ப.சிதம்பரத்தின் எம்.பி. பதவி நிறைவடைந்ததால் அவர் தமிழ்நாட்டில் ராஜ்ய சபாவுக்கு செல்ல விருப்பம் தெரிவிப்பதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட, ப.சிதம்பரம் நாளை (மே 30) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இதனிடையே, மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் இருந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவை உறுப்பினராகிறார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“