நடப்பாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவற்றை தூர் வார ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.
இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணை பாதுகாப்பு கருதி கடந்த 24-ம் தேதி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் திறந்துவிட்டார்.
இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்றுள்ளன என்பதை ஆய்வு செய்வதற்காக, சென்னையில் இருந்து இன்று (மே 30) திருச்சி வந்துள்ளார். திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்தினார்.
இதன் பிறகு முதல்வர் ஓய்வு எடுப்பார் என்று நினைத்த நிலையில் அதிரடியாக வண்டியை திருச்சி மாநகராட்சிக்கு விடுங்கள் என்று கூறியுள்ளார். மாநகராட்சி கூட்டம் முடிந்த பிறகு, நடைபெற்றுக்கொண்டிருந்த பொதுமக்களின் குறைதீர் கூட்டத்தில் அதிரடியாக நுழைந்த முதல்வர், மேயர் அறையில் அமர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என மேயர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். மாநகராட்சி வரலாற்றில் முதன் முறையாக முதல்வர் ஒருவர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தது என்பது முதல் முறையாகும்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் மு க ஸ்டாலின், உறையூரில் வசித்து வரும் திமுக வெளியீட்டு செயலாளர் திருச்சி செல்வேந்திரன் இல்லத்திற்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். இந்த நிகழ்வுகளில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்கள் கே.என் நேரு, நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், கார் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்குச் சென்று, அங்கு தங்கும் முதல்வர், நாளை (மே 31) காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு கல்லார், தரங்கம்பாடி, திருவாரூர் மாவட்டம் காட்டூர் ஆகிய பகுதிகளில் தூர் வாரும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்கிறார்.
தொடர்ந்து, மதிய உணவு மற்றும் ஓய்வுக்குப் பிறகு தஞ்சாவூர் மாவட்டம் வரும் அவர், பல்வேறு இடங்களில் தூர் வாரும் பணிகளை பார்வையிடுகிறார்.
க. சண்முகவடிவேல்