விக்ரம் : டென்ஷன் கொடுக்கும் அனிருத்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'விக்ரம்'. இப்படம் இன்னும் சில தினங்களில் ஜுன் 3ம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
பொதுவாக வெளிநாடுகளுக்கு ஒரு படத்தின் பிரதியை இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னரே அனுப்பிவிடுவார்கள். ஆனால், படத்தின் இசை வேலைகளை இசையமைப்பாளர் அனிருத் இன்னும் முடிக்கவில்லையாம். அதை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
ஒரு படத்திற்கு பின்னணி இசை என்பது உயிரோட்டமாக அமைய வேண்டும். இசையமைப்பளார் பின்னணி இசையை அமைத்ததும், அது காட்சிகளுக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறதா என இயக்குனர் பார்க்க வேண்டும். தன்னுடைய இசையை இயக்குனர்கள் திருத்தம் செய்வதை அனிருத் விரும்பவில்லையாம். பட வெளியீடு வரை படத்திற்கு பின்னணி இசை அமைத்தால் கால நெருக்கடியின் காரணமாக இசையில் இயக்குனர்கள் எந்தத் திருத்தத்தையும் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் அதை உடனடியாக செய்து முடிக்க முடியாது. எனவேதான் அனிருத் இப்படி கடைசி நேரம் வரை இழுத்தடிப்பதாகச் சொல்கிறார்கள்.
படத்திற்கான பின்னணி இசை தாமதம் ஆவதில் கமல்ஹாசனும் டென்ஷனாகவே உள்ளாராம். படத்தின் பிரமோஷனுக்காக வெளியூர்களில் சுற்றிக் கொண்டிருப்பவர், அடிக்கடி இது பற்றிய அப்டேட் கேட்பதால் படக்குழுவினரும் டென்ஷனாகவே இருக்கிறார்களாம்.