சென்னை: மாமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் படம் வைக்க வேண்டும் என்றும், மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செய்யும் சலுகை வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய 139-வது ம.தி.மு.க., கவுன்சிலர் சுப்பிரமணி, “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேருந்தில் இலவச பயணம் போன்ற சலுகைகள் உள்ளது போல் கவுன்சிலர்களுக்கு மெட்ரோ ரயில்களில் இலவச பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அப்போது, கவுன்சில் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. மேயர், துணை மேயரும் சிரித்தனர்.
6-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாமுவேல் திரவியம், “சென்னை மாநகராட்சி மாமன்றக் கூடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் இடம்பெற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
102-வது வார்டு திமுக கவுன்சிலர் ராணி, “ஷெனாய் நகரில் அம்மா அரங்கத்தை, கருணாநிதி அல்லது அண்ணா பெயரில் மாற்றம் வேண்டும்” என்று தெரிவித்தார்.
181-வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், “இசிஆர் சாலைக்கு கலைஞர் கருணாநிதி சாலை பெயர் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் பல இடங்களில் உள்ள சாலையின் பெயர் பலகைகள் மாற்றப்படவில்லை” என்று தெரிவித்தார். மேலும், “திமுக ஆட்சி வந்த பிறகு ஒன்றிய அரசு சொத்து வரியை உயர்த்தியுள்ளது” என்றார் அவர்.