கமல், சத்யராஜ், டிம்பிள் கபாடியா, லிசி, அம்பிகா நடித்த `விக்ரம்’ வெளியாகி 36 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவில் முதன்முறையாகக் கம்ப்யூட்டர் வசதியுடன் இசைக்கப்பட்ட படம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. ஓல்டு ‘விக்ரம்’ படத்தின் கோல்டு நினைவுகளை இங்கே குதூகலமாகப் பகிர்கிறார் லிசி.
”நான் நடிக்க வரும்போது ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன். ‘விக்ரம்’ல நடிக்கும்போது எனக்கு 17 வயசுதான். சின்ன வயசுல இருந்தே நான் கமல் ரசிகைனால ‘விக்ரம்’ ஸ்பாட்ல ஒவ்வொரு நாளும் த்ரில்லிங்கா, சந்தோஷமா போச்சு.
” ‘விக்ரம்’ யூனிட்லதான் என்னோட17-வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினாங்க. கமல் சார் எனக்கு சாக்லெட்ஸ் கொடுத்தார். அப்புறம் எனக்கொரு பொக்கே பரிசளிச்சார். அந்த பொக்கே காய்ந்து பொடிப்பொடியாக ஆகும் வரை பாதுகாத்து வச்சிருந்தேன். படத்துல நான் ஒரு பெரிய கண்ணாடியோட இருப்பேன். நான் ரொம்ப சின்னப் பொண்ணா தெரிஞ்சதாலேயும் ஒல்லியாக இருந்ததாலேயும் என் லுக்கை அப்படி ஆக்கினாங்க. அதாவது அதுல நான் கம்ப்யூட்டர் ஆப்ரேட் பண்ணுவேன். அதுக்கான இன்டலெக்சுவல் லுக்கிற்காக அந்தக் கண்ணாடியை கொடுத்துட்டாங்க. முகத்தையே மறைக்கற மாதிரி அந்த கண்ணாடி இருந்ததால, அப்ப அப்செட் ஆகவும் ஆகியிருக்கேன். அதெல்லாம் நினைச்சா இப்ப சிரிப்புத்தான் வருது.
அந்த படத்துல நிறைய நட்புகள் அமைஞ்சது. அம்ஜத் கான் சார், பார்க்கறதுக்கு தான் முரட்டு ஆளா இருப்பாரே தவிர, குழந்தை மனசுக்காரர். அதைப் போல டிம்பிள் கபாடியாவின் நட்பு அருமையான நட்பு. ரொம்ப கார்ஜியஸ் கேர்ள். அவ்ளோ அழகு அவங்க. டிம்பிளோட அருக்கே நிற்கும் போது நான் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல உணர்ந்தேன். ஏன்னா, அவங்க மும்பையில இருந்து வந்ததால ஃபேஷன், மேக்கப்ல அசத்தினாங்க. அவங்க ஸ்கின் மினுமினுப்பு, ஹேர், கலரிங் எல்லாமே அசத்தலா இருந்ததால, எனக்குள் ஒரு காம்ப்ளக்ஸே வந்திடுச்சு. அவங்க தங்கை சிம்பிள் கபாடியா, எனக்கு நெருங்கிய தோழியாகிட்டாங்க. சிம்பிள் ஃபேஷன் டெக்னாலஜி படிச்சிருந்ததால, எனக்கு மேக்கப்போட்டு விட்டிருக்காங்க. இப்ப அவங்க இல்ல. அவங்க இழப்பு பேரிழப்புதான். ‘ஏஞ்சோடி மஞ்சக்குருவி’ பாட்டுல எனக்கான காஸ்ட்யூம்ஸ் எதுவும் சரியா செட் ஆகாததால, சிம்பிளோட சொந்த டிரெஸை எனக்காக கொடுத்தாங்க. அந்த பாடல்ல அவங்க கொடுத்த டிரெஸைதான் அணிஞ்சிருந்தேன். அந்த பாடலை இப்பக்கூட டி.வி.யில பார்க்கும் போது, அந்த டிரெஸ்தான் ஞாபகத்துக்கு வரும். படத்தோட க்ளைமேக்ஸ் ஷூட் மங்களூர்ல இருந்ததால, கிட்டத்தட்ட ரெண்டு வாரங்கள் மங்களூர்ல ஃபைட் சீக்குவென்ஸ்ல நானும் இருந்தேன்.
படத்துல எனக்கு ராதிகாதான் டப்பிங் பேசினாங்க. அப்ப அவங்க எனக்கு அறிமுகம் கிடையாது. கமல் சார் கேட்டதால எனக்காக பேசினாங்க. அப்புறம் நானும் ராதிகாவும் நெருங்கிய தோழிகளாகிட்டோம். அவங்க சந்திக்கறப்பெல்லாம் ‘உனக்கு நாந்தான் டப்பிங் பேசினேன். தெரிஞ்சுக்கோ’னு சொல்லி கலாய்ப்பாங்க.
‘விக்ரம்’ படத்துக்கு முன்னாடி மலையாளத்துல மோகன்லால், முகேஷ் படங்கள் பண்ணினேன். தமிழிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய படங்கள் தான் பண்ணியிருப்பேன். கொஞ்ச வருஷம்தான் சினிமா ஃபீல்ட்டுல இருந்தேன். அப்புறம் கல்யாணம் பண்ணிட்டு போயிட்டேன். இப்ப மறுபடியும் நடிக்கணும்னு விரும்புறேன். இடையே நடிக்க கேட்டு வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா, நல்லா ரோல்களாக இருந்தால் மட்டுமே நடிப்பேன். இப்ப உள்ள ‘விக்ரம்’ டைட்டில் வர்றதுக்கு முன்னாடியே கமல் சார் அதைப் பத்தி சொன்னார். இதில் என்னை நடிக்க கூப்பிடுவாங்கனு நினைச்சேன். ஒரு வேளை ‘விக்ரம்-3’ல கூப்பிடுவாங்க போல” – முகம் மலர்கிறார் லிசி.