யுபிஎஸ்சி தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியானநிலையில், கோவையைச் சேர்ந்த சுவாதி ஸ்ரீ, 42-வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான, 749 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு தேர்வுகள் நடைபெற்றன. முதன்மை எழுத்துத் தேர்வு, பிரதான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையளத்தில் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்வெழுதியவர்களில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வில்
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுருதி சர்மா முதல் இடத்தையும், தமிழகத்தை சேர்ந்த 25 வயதான சுவாதி ஸ்ரீ 42-வது இடத்தையும் பிடித்துள்ளனர். தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த சுவாதி ஸ்ரீ இதுகுறித்து தெரிவிக்கையில், தேர்வில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார். மேலும், 4 ஆண்டுகள் முயற்சிக்கு கிடைத்த பயனாக இதனை நினைக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக முடிந்தவரை விவசாயம் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக உழைப்பேன் என்றும் சுவாதி ஸ்ரீ கூறியுள்ளார்.
பள்ளிப் படிப்பை உதகை மற்றும் குன்னூரில் முடித்த சுவாதி ஸ்ரீ, பின்னர் தஞ்சாவூரில் உள்ள ஆர்விஎஸ் வேளாண்மை கல்லூரியில் பி.எஸ்சி அக்ரி படித்துள்ளார். முதல் முறை யுபிஎஸ்சி தேர்வெழுதியபோது பிரதானத் தேர்வில் தேர்வாகாத சுவாதி ஸ்ரீ, இரண்டாவது முறை முயற்சியில் இந்திய அளவில் 126-வது இடம் பிடித்து ஐஆர்எஸ் பதவிக்கு தேர்ச்சியடைந்துள்ளார். எனினும் தனது ஐஏஎஸ் கனவை விடாமல் முயற்சித்து 3-வது முறையாக எழுதிய யுபிஎஸ்சி தேர்வில், இந்திய அளவில் 42-வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார் கோவையைச் சேர்ந்த சுவாதி ஸ்ரீ.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM