புதுடெல்லி: டெல்லியில் 5 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை பொதுமக்கள் அடித்ததால் அவர் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். தென்மேற்கு டெல்லியின் தாப்ரி பகுதியில் வசித்து வந்த 30 வயதுடைய பெண்ணுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவரை பிரிந்த இவர், இரண்டாவதாக 40 வயதுடைய ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 40 வயதுடைய அந்த நபர், 5 வயதான தனது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.அதையறிந்த அப்பகுதிமக்கள், அவரை சரமாரியாக தாக்கினர். தகவலறிந்த போலீசார், குற்றம்சாட்டப்பட்டவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருந்தும் குற்றம்சாட்டப்பட்டவர் மயக்க நிலையில் இருந்ததால், அவரை ஹரி நகர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டார். இவ்விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவரை போலீசார் அடித்துக் கொன்றதாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (துவாரகா) சங்கர் சவுத்ரி கூறுகையில், ‘தனது மைனர் வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்தவரை மீட்பதற்காக நாங்கள் செல்வதற்குள், அவரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த டாப்ரி காவல் நிலையத்திற்கு அழைத்துவந்தோம். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தோம். திடீரென குற்றம் சாட்டப்பட்டவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆனால், மருத்துவமனையில் இறந்துவிட்டார். பொதுமக்களால் தாக்கியதில் இறந்ததால், ஐபிசி 176ன் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.