9-வது நாளாக நீடிக்கும் ஸ்டிரைக்கால் திருப்பூரில் ரூ.900 கோடி ஜவுளி துணி உற்பத்தி பாதிப்பு

பல்லடம்:

தமிழகத்தில் சுமார் 6 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி தொழில் மூலம் நேரிடையாக சுமார் 10 லட்சம் பேரும், மறைமுகமாக சுமார் 50 லட்சம் பேரும் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக இந்த விசைத்தறி ஜவுளி தொழில் உள்ளது.

உற்பத்தியான துணிக்கு உரிய விலை கிடைக்காதது, தொழிலாளர் பிரச்சினை, வங்கி கடன் உள்ளிட்ட பிரச்சினைகளால் விசைத்தறி தொழில் ஏற்கனவே நலிவடைந்து உள்ளது. தற்போது விசைத்தறி ஜவுளி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக இருந்து வரும் நூலின் விலை கடந்த 18 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஜவுளி தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே நூல் விலை உயர்வை கண்டித்தும், விலையை கட்டுப்படுத்தக்கோரியும் திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 22-ந்தேதி முதல் வருகிற 5-ந்தேதி வரை 15 நாட்கள் தொடர் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்து வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக திருப்பூர், கோவை, மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இன்று 9-வது நாளாக வேலைநிறுத்தப்போராட்டம் நீடிக்கிறது.

இதனால் தினமும் ரூ .100 கோடி மதிப்பிலான காடா ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதுடன் இன்றுடன் ரூ. 900 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால், விசைத்தறி தொழிலாளர்கள் மட்டுமின்றி, அதனை நம்பியுள்ள வாகன ஓட்டுநர்கள், கலாசு தொழிலாளர்கள், உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள், ஒர்க் ஷாப் தொழிலாளர்கள் என பல்வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருப்பூர், கோவை மாவட்டங்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகள் நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வந்து ஜவுளித்தொழிலை காப்பாற்ற வேண்டும் என விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி துணிகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.