கோளாறான பயிற்சி கருவியை பயன்படுத்தியதால் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 90 விமானிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து இயக்குநரகம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு பத்து லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
போயிங் 737 மாக்ஸ் விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட இயந்திரம் கோளாறாக இருந்ததாக DGCA என அழைக்கப்படும் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கோளாறான இயந்திரத்தில் பயிற்சி பெற்ற 90 விமானிகளுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டும் என இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் பயிற்சி அளிக்கப்படும் வரை இந்த விமானிகள் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்கக் கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயிற்சி அளித்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு பத்து லட்ச ரூபாய் அபராதமும் விதித்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடையை பயணிகள் விமான போக்குவரத்து இயக்குநரகம் சென்ற மார்ச் மாதத்தில் நீக்கி இருந்தது. இந்தோனேஷியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் இந்த ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதால் உலகின் பல்வேறு நாடுகள் 2019 ஆம் வருடத்திலேயே போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க தடை விதித்திருந்தன. அந்த தடை நீக்கப்பட்ட சூழலில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் தன்வசமிருந்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை பயன்படுத்த தொடங்கியது.
பயிற்சி விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டு பயணிகளுக்கு இந்த ரக விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறதா என இயக்குநரகம் சோதனையை நடத்தியது. அந்த சோதனையில் பயிற்சி கருவியில் முக்கிய கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மீண்டும் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் அதுவரை அவர்கள் இந்த ரக விமானங்களை இயக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சரியான பயிற்சி இல்லாமல் விமானிகள் செயல்படுவது பயணிகளின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல என இயக்குநரகம் கருதுவதால் ஸ்பைஸ் ஜட் நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாய் அபராதமும் விவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருப்பதாக சொல்லப்படும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சமீபத்தில் ஹேக்கர்கள் தங்களுடைய நிறுவனம் பயன்படுத்தி வரும் மென்பொருளை முடக்குவதாக மிரட்டி பணம் கேட்டதாக தெரிவித்திருந்தது. இதனால் விமான நிலையங்கள் உள்ளிட்ட சேவை அமைப்புகளுக்கு ஸ்பைஸ்ஜெட் செலுத்தவேண்டிய கட்டணங்களை சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-கணபதிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM