தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என தி.மு.க ஆட்சியமைத்ததிலிருந்தே அந்தக் கட்சிக்குள் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்தப் பேச்சு எழுந்தபோதே தி.மு.க-வின் சுற்றுச் சூழல் அணி சார்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டு ஓராண்டாகியிருக்கும் நிலையில், தற்போது பல்வேறு அமைச்சர்களும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் எனத் தீர்மானமாக நிறைவேற்றி வருகிறார்கள். அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க-வின் செயற்குழு கூட்டம் மே 30-ம் தேதி நடைபெற்றது. அதில் ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை மாவட்ட அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனவும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல திண்டுக்கல் தி.மு.க கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் சார்பாகத் திண்டுக்கல் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடந்த செயற்குழுக் கூட்டத்திலும், ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடுவது குறித்த தீர்மானத்தோடு தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உதயநிதி அமைச்சராக வேண்டும் எனத் தொண்டர்கள் தொடங்கி அமைச்சர்கள்வரை பேசிவந்த நிலையில், தற்போது ஆங்காங்கே அதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், இப்படித் தீர்மானங்கள் நிறைவேற்றி தலைமைக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
“தர்ம சங்கடத்தை உருவாக்கிட வேண்டாம்” – உதயநிதியின் அறிக்கை
“திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டங்களில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவைத்திருப்பது குறித்து அறிந்தேன். என் தொடர் பணிகள்மீதும், முன்னெடுப்புகள்மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நான் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன். கழகம் வழங்கிய வாய்ப்பில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகத் தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள் பணியையும், கழகத் தலைவர் மற்றும் கழக முன்னோடிகளின் வழிகாட்டுதலில் கழக இளைஞர் அணியின் செயலாளராகத் தமிழ்நாடு முழுவதும் பயணித்து, சுழகப் பணியையும் என்னால் இயன்றவரைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். கழகத்தை இளைஞர்களிடம் கொண்டுசேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன் பாசறைக் கூட்டங்கள் நடத்துவது, நலத்திட்டப் பணிகளில் ஈடுபடுவதெனப் பலவற்றுக்குமான பயணங்களுக்குத் தயாராகி வருகிறேன். இந்தச் சூழலில், என் மீதுள்ள அன்பின் காரணமாக, எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கத் தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதைக் கழகமும், தலைமையும் நன்கறியும் என்பதைக் கழக உடன்பிறப்புகள் நாம் அனைவரும் அறிவோம்.
எனவே, பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் வழியில் வந்த நம் கழகத் தலைவர் வழங்கும் கட்டளையின் வழியில் நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும் தொடர்ந்து உழைத்திடுவோம்! மக்கள் பணியாற்றிடுவோம்! கழகத்துக்கும் கழக அரசுக்கும் மகத்தான புகழைச் சேர்த்திடுவோம்” என உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“அரசியல் முதிர்ச்சியில்லாதவர் உதயநிதி” – போட்டுத் தாக்கும் பா.ஜ.க
உதயநிதியை அமைச்சராக்குவது குறித்து எழுந்துள்ள கருத்துகள் பற்றி நம்மிடம் பேசினார் பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. “வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழ்நாடு மக்களை முட்டாள்களாக நினைத்துக்கொண்டு புகுத்தும் ஓர் அரசியல். ஸ்டாலின் பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்று முதல்வராக அமர்ந்திருக்கிறார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவரிடம் அரசியல் முதிர்ச்சியின்மை இருக்கிறது. வாரிசு என்ற அடிப்படையில் அமைச்சராக்க வேண்டும் எனச் சொல்வது மக்களைத்தான் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும். அதைத்தான் நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். மேலும், இது தி.மு.க-வில் இருக்கும் மூத்த தலைவர்களையும் முகம் சுழிக்க வைக்கும். சட்டரீதியாக பார்த்தால் அவர்கள் செய்வது சரி. ஆனால், மனசாட்சியின்படி, ஜனநாயகத்தின்படி அதிகாரம் அனைத்தையும் தன் குடும்பத்தினருக்கே கொடுப்பது எந்த வகையில் சரியானதாக இருக்கும்.
அரசியல் கட்சி என்பது தனிநபரின் சொத்து இல்லை. சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு மக்களின் தேவைக்காகப் பணியாற்ற வேண்டிய ஓர் அமைப்பு. ஆனால், ஒரு குடும்பத்துக்காகவே கட்சியை நடத்திக்கொண்டிருக்கும் தி.மு.க உதயநிதியையும் அமைச்சராக்கினால் இளைஞர்களால் நிச்சயம் வெறுத்து ஒதுக்கப்படும். இன்றைக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், எதிர்காலத்தில் நிச்சயம் இதற்கான விலையைக் கொடுப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
ஒரு கட்சியில் இளைஞரணிச் செயலாளராக இருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால், மாநிலத்தின் அமைச்சராக வேண்டுமென்றால் அரசியல் முதிர்ச்சியும், மக்களின் தேவை குறித்த நல்ல சிந்தனையும் இருக்க வேண்டியது கட்டாயம். ஆனால், இவை உதயநிதியிடம் இருக்கிறதா இல்லையா என்பதை தி.மு.க-வினரே அறிவார்கள். தேர்தல் சமயத்தில் அவர் பேசியது, நடந்துகொண்டது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. இப்போது அமைச்சராக மட்டுமல்ல எதிர்காலத்தில் நல்ல அரசியல்வாதியாக வருவாரா என்பதும் கேள்விக்குறியே.
திராவிட மாடல் என்பதே செய்யாதே என்பதைச் செய்வது, செய்யக் கூடியதைச் செய்யாமல் தவிர்ப்பது, செய்யக் கூடாததைச் செய்வது. அப்படித்தான் உதயநிதியின் பேச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.” என விமர்சனங்களை அடுக்கினார்.
“தொண்டர்களைத் தாண்டி மக்களின் விருப்பமாக உள்ளது!” – அடித்துப் பேசும் திமுக-வினர்
தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தீர்மானங்கள் குறித்தும், உதயநிதியின் அறிக்கை குறித்தும் நம்மிடம் பேசினார். “காலம், நேரம் வரும்போது தலைமை உரியதைச் செய்யும். தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் எனத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இளைஞரணிச் செயலாளர் ஆக்கியது, சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியது என அனைத்தையும் தலைமைதான் முடிவெடுத்து உரிய நேரத்தில் செய்தது. அதேபோல இந்த விஷயத்திலும் தலைமை உரிய நேரத்தில் முடிவெடுக்கும். அதுவரை தலைமைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்றுதான் அவரும் சொல்லியிருக்கிறார். தீர்மானங்கள் நிறைவேற்றியது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால் அதற்கும் பதில் சொல்ல வேண்டும். இப்படியான நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டாம் என்றுதான் உதயநிதி சொல்லியிருக்கிறார். அமைச்சரவையைப் பொறுத்தவரை இறுதி முடிவு முதல்வர்தான் எடுக்க வேண்டும். எதையும் இயல்பாக எதிர்கொண்டு தீர்வு சொல்வது உதயநிதியின் பாணி. அப்படித்தான் இதையும் உதயநிதி கையாண்டிருக்கிறார். இளைஞரணிச் செயலாளராகக் கட்சிக்கும், சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கும் உதயநிதி செய்த பணிகள் அளப்பரியது.
சேப்பாக்கம் தொகுதி மக்களிடம் சென்று கேளுங்கள். சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி செய்த வேலைகள் எவ்வளவு என்று கூறுவார்கள். அவர்களிடம் உதயநிதி அமைச்சராக வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் ஆமாம் என்றுதான் பதில் சொல்வார்கள். அமைச்சர்களின் கருத்தாக இருந்தது, தொண்டனின் கருத்தாக மாறி இப்போது மக்கள் விருப்பமாகியிருக்கிறது. அதை உரிய நேரத்தில் தலைமை செய்யும் அதுவரை பொறுமையாக இருங்கள் என்றுதான் சொல்கிறார் உதயநிதி. இதற்கு அரசியல் சாயம் பூசுவது வெட்டி வேலை” என விமர்சனங்களுக்கு விடையளித்தார்.