அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் நிதிச் சட்டங்கள் பலவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.
இதற்கமைவாக 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம், 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டம், தொலைத்தொடர்பு வரிச்சட்டம், 2011ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க, பந்தயம் மற்றும் சூதாட்ட சட்டம் முதலான சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதுகுறித்து திருத்தம் செய்வதற்குத் தேவையான சட்டமூலங்களைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ,அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன இன்று (31)
நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சரவையில் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
07. பொருளாதார உறுதிப்பாட்டிற்காக வருமானத்தை அதிகரித்தல்
2019 ஆம் ஆண்டிறுதியில் இலகு வரிக்கொள்கையை அறிமுகப்படுத்தி சேர் பெறுமதி வரி, தனிநபர் வருமான வரி, கூட்டு வருமான வரி போன்ற வரிகளில் வரிவீதத்தைக் குறைப்பதற்கும், சேர் பெறுமதி வரி மற்றும் தனிநபர் வருமான வரியை குறைப்பதற்கும் அரசாங்கத்தால் மேற்கொண்ட தீர்மானத்தால் அரச வருமானம் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது. அவ்வாறே, மொத்த தேசிய உற்பத்தி வீதமாக வரவு செலவுப் பற்றாக்குறை மற்றும் அரச கடன் அதிகரிப்பதற்கும் குறித்த தீர்மானம் காரணமாக அமைந்துள்ளது. இந்நிலைமையின் கீழ் அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் கீழ்க்காணும் சட்டங்களை திருத்தம் செய்வதற்குத் தேவையான சட்டமூலங்களைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டம்
• 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சேர் பெறுமதி வரிச் சட்டம்
• 2011 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க தொலைத்தொடர்பு அறவீட்டுச் சட்டம்
• 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தயங்கள் மற்றும் சூதாட்ட வரிச் சட்டம்
• 2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டம்