விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குறவர் சமூகத்தை சேர்ந்த சக ஊழியரை, சாதியின் பெயரால் துன்புறுத்தியதாக தமிழக பொதுப்பணித்துறை ஊழியர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையின்படி, விருதுநகர் செயற்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிபவர் மாரியப்பன் (48). இவர் குறவர் இனத்தைச் சேர்ந்தவர். இதனால் அங்கு பணிபுரியும் சக ஊழியர்கள் மாரியப்பன் சாதி பெயரை சொல்லி, அவரை தீண்டத்தகாதவர் போல நடத்தி உள்ளனர்.
சக ஊழியர்கள் தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் டம்ளர் கூட பயன்படுத்த மாரியப்பனுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல, கழிவறை, அலுவலகக் கணினியைப் பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள ஒரு அலுவலகத்தில் இருந்து மாரியப்பன் இடமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து அவரது சக ஊழியர்களால் அவர் துன்புறுத்தப்பட்டதாக தெரிகிறது. மேலும் அவர்கள், அவரை இடமாற்றம் செய்யுமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மாரியப்பன் மே 27 அன்று, விருதுநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த விருதுநகர் ஊரக போலீஸ், சூப்பிரண்டு இளங்கோவன், காவலாளி கதிரேசன், இளநிலை உதவியாளர் கணேஷ் முனியராஜ், தட்டச்சர் ராஜேஷ், உதவி அதிகாரி முத்து முருகானந்தம், கோட்ட கணக்காளர் தர்மேந்திர யாதவ் ஆகியோர் மீது SC/ST சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 147 (கலவரம்), 294B மற்றும் 506 (கிரிமினல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இது அவர்களின் மாநிலமாக (உத்தர பிரதேசம்) இருந்திருந்தால், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரை அலுவலகத்தில் இருக்க அனுமதித்திருக்க மாட்டார்கள் என்று யாதவ் என்னிடம் கூறினார், உயர்சாதி ஆண்களால், கீழ்சாதி ஆண்கள் அடிக்கப்படும் வீடியோக்களை யாதவ் என்னிடம் காட்டினார். கண்காணிப்பாளர் இளங்கோவன் சொல்வதைக் கேட்காவிட்டால் எனக்கும் இதே கதி ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது என்று எப்ஐஆரில் மாரியப்பன் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து மாரிப்பன் துறையின் உயர் அதிகாரிகளிடம் புகாரளித்தபோது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“