டாடா குரூப் தலைமை அதிகாரி சித்தார்த் சர்மா அவர்கள் தனது குழந்தைகள் குறித்து பெருமையாக கூறியதோடு, அனைத்து பெற்றோர்களுக்கும் கூறும் அறிவுரையாக அவர்கள் உங்கள் குழந்தைகள் என்றும், குளோன்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
டாடா குழுமத்தின் தலைமை அதிகாரி சித்தார்த் சர்மா சமீபத்தில் ஒரு பெருமைமிக்க அப்பா என்ற தருணத்தை அனுபவித்தார். அவரது மகன்களில் ஒருவர் ஹார்வர்ட் பல்கலையில் சிறப்பு பட்டம் பெற்றுள்ளார்.
சர்மாவின் மூத்த மகன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வருகிறார். அவரது மூன்றாவது மகன் விரைவில் பிரெஞ்ச் பல்கலைகழகத்தில் படிக்க உள்ளார்.
குஜராத் ஃபோர்டு தொழிற்சாலையை கைப்பற்றும் டாடா.. அப்போ சென்னை தொழிற்சாலை..?

பெற்றோரின் சாதனை
சித்தார்த் சர்மா மகன்களின் கல்வி சாதனைகளை பார்க்கும்போது ஒரு பெற்றோரின் மிகப்பெரிய சாதனை அனைவரின் கண்முன் எழுவதில் வியப்பில்லை. இந்த நிலையில் மூன்று குழந்தைகளை வளர்க்கும்போது கற்றுக்கொண்ட சில விஷயங்களை அவர் மற்ற பெற்றோர்களுக்கு தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்? குழந்தைகள் முன் பெற்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்து அவர் விரிவாக கூறியுள்ளார்.

குளோன்கள் அல்ல
முதலில் அவர் கூறுவது உங்கள் குழந்தைகள், குளோன்கள் அல்ல என்பதுதான். உங்களுடைய எண்ணத்தை குழந்தைகளிடம் புகுத்த வேண்டாம் என்றும் குழந்தைகளுக்கு அன்பு, மரியாதை மற்றும் நம்பிக்கையை கற்று கொடுக்க வேண்டும் என்றும் இது நீங்கள் செய்யும் முதல் காரியம் என்று தெரிவித்துள்ளார்.

குழந்தைகள்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் விவாதிக்க வேண்டும் என்றும், அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்து அவர்களுக்கு புதிய எண்ணங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். குழந்தைகளை மென்மையாக வழி நடத்துங்கள் என்றும், அவர்கள் சொந்தமாக முடிவு எடுப்பதற்கு உண்டான திறமையை வளர்க்க நீங்கள் உதவியாக இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வழிகாட்டி
எந்த பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சினையை எப்படி தீர்க்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யாமல், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அந்த பிரச்சனையை அவர்களே எப்படி தீர்க்கின்றார்கள் என்பதை தள்ளிநின்று வேடிக்கை பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நேரம்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவிட வேண்டும் என்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்வதற்கு கணக்குப் பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகளுடன் அன்புடன் நேரத்தை செலவழிப்பதை விட வேறு எதுவும் உங்களுக்கு பெரிய வேலை இருக்காது என்றும் உங்களை விட குழந்தைகளுக்கு வேறு எந்த ஒரு ஆதரவும் இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கடினமான பணி
குழந்தைகளை வளர்ப்பது என்பது பெற்றோருக்கு மிகவும் கடினமான பணி என்பதை ஒப்புக் கொண்ட அவர், ஆனால் கூடுதல் முயற்சி எடுக்க தயாராக வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். நீங்கள்தான் அவர்களை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தீர்கள், அவர்களாகவே விரும்பி உங்களிடம் வரவில்லை என்று கூறிய சித்தார்த் சர்மா, குழந்தைகளுக்கு எதையும் சொல்லிக் கொடுக்கும்போது அரைகுறையாக இல்லாமல் அனைத்தையும் முழுமையாக சொல்லுங்கள் என்று கூறினார்.

கருத்து வேறுபாடு
மேலும் ஒரு முக்கிய விஷயமாக குழந்தைகள் முன் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை காட்ட வேண்டாம் என்றும், பிள்ளைகள் எப்போதும் எங்கள் பெற்றோர் ஒற்றுமையானவர்கள், பிரிக்க முடியாதவர்கள் என்ற எண்ணத்தை மனதில் நிலை நிறுத்த வேண்டும்’ என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
They are your children, not your clones: Tata Group Executive Siddharth Sharma
They are your children, not your clones: Tata Group Executive Siddharth | அவர்கள் உங்கள் குழந்தைகள், குளோன்கள் அல்ல: டாடா குரூப் தலைமை அதிகாரியின் அட்வைஸ்