ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக புதிய சட்டம்! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டு வர தமிழகஅரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காவல்துறையின் கைகள் கட்டிப்போடப்பட்டு உள்ளதாகவும், கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும், டிஜிபியின் ரம்மி குறித்த அறிவிப்பு மற்றும் ஆட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும்  தெரிவித்துள்ளார். மேலும் எடப்பாடியின் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறினார். திமுக ஆட்சியில் காவல்துறை யினர் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது என்று கூறியதுடன்,  திமுக ஆட்சி அமைந்த பின்னர்தான் தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.திமுக ஆட்சியில் சாதிச் சண்டைகள், மதச் சண்டைகள், பயங்கரவாத செயல்கள் எங்கும் நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் காழ்ப்புணர்ச்சிக்கு இடமில்லை.  தமிழ்நாடு மிக அமைதியான மாநிலமாக திகழ்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எல்லா வகையிலும் பொது அமைதியை பேணிக்காத்து வருகிறது. திமுக ஆட்சி அமைந்த பின் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிமுக  ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் நடைபெற்றது. அதிமுக கடைசி ஓராண்டு ஆட்சியில் 1695 கொலைகள் நடைபெற்றுள்ளது கொள்ளைகள் 146, கூலிப்படை கொலைகள் 30, போலீஸ் துப்பாக்கிச் சூடு 16 ஆனால் திமுக ஆட்சியில் இவையெல்லாம்  குறைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மியை தடுக்க குறைபாடுகள் உள்ள சட்டத்தை அதிமுக அரசு இயற்றியது. குறைபாடுள்ள சட்டமாக இருந்ததால் நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதிமுக ஆட்சியில் தான் குட்கா, கஞ்சா புழக்கம் அதிக அளவில் இருந்தது. திமுக ஆட்சி அமைந்த பின் கஞ்சா விற்பனை செய்ப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் தங்கு தடையின்றி குட்கா புழக்கத்தில் இருந்தது. அதிமுக ஆட்சியில் சென்னை மாநகரத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவங் களை பட்டியலிட்டால் நேரம் போதாது.  கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களின் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்ட விரத்தியில் எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு மாறான தகவல்களை தருகிறார். பொய் குற்றச்சாட்டுகள் சொல்வதை பொறுப்புணர்ந்து எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகம்; இதுதான் திமுக சாதனை! எடப்பாடி பழனிச்சாமி…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.