'இந்தியாவுக்காக உலக கோப்பையை வெல்வதே எனது லட்சியம்' – ஹர்திக் பாண்ட்யா பேட்டி

ஆமதாபாத்,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை தோற்கடித்து மகுடம் சூடியது. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தானை 130 ரன்னில் கட்டுப்படுத்திய குஜராத் அணி அந்த இலக்கை 18.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து அசத்தியது.

அதிகபட்சமாக சுப்மான் கில் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். ஆல்-ரவுண்டராக ஜொலித்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (34 ரன் மற்றும் 3 விக்கெட்) ஆட்டநாயகன் விருது பெற்றார். அனில் கும்பிளே (2009-ம் ஆண்டு பெங்களூரு அணி), ரோகித் சர்மா (2015-ம் ஆண்டு மும்பை அணி) ஆகியோருக்கு பிறகு இறுதி ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது பெற்ற கேப்டன் என்ற சிறப்பை பாண்ட்யா பெற்றார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடத்தை பிடித்த ராஜஸ்தானுக்கு ரூ.12½ கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

வெற்றி பெற்றதும் ஹர்திக் பாண்ட்யா மைதானத்தில் ரசிகர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தபடி நடந்து கொண்டிருந்தார். அப்போது களத்திற்குள் நுழைந்த அவரது மனைவி நடாஷா, ஹர்திக் பாண்ட்யாவை கட்டித்தழுவி மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டார். உணர்ச்சிபூர்வமான இந்த காட்சி இப்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பின்னர் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

உலகின் எந்த அணியாக இருந்தாலும் ஒரு குழுவாக ஒருங்கிணைந்து விளையாடினால் அதிசயங்களை நிகழ்த்தலாம் என்பதற்கு எங்கள் அணியே சரியான உதாரணம். புதிய அணியாக அடியெடுத்து வைத்து அறிமுக சீசனிலேயே சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் ஒரு புதிய மரபை உருவாக்கி இருக்கிறோம். ஒவ்வொருவரும் எங்கள் அணியை நினைவில் வைத்து இருப்பார்கள். அடுத்து வரப்போகும் தலைமுறையினர் குஜராத் அணியின் ஐ.பி.எல். வெற்றி குறித்து பேசுவார்கள்.

20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களின் ஆட்டமாக சொல்வார்கள். ஆனால் பந்து வீச்சாளர்களாலும் வெற்றியை தேடித்தர முடியும். இதற்கு துல்லியமான பந்து வீச்சு தொடுக்கும் பவுலர்கள் அவசியமாகும். அப்படிப்பட்ட பவுலர்கள் தான் எங்களிடம் இருந்தனர். மற்ற அணி 190 ரன்கள் விட்டுக்கொடுக்கிறது என்றால், நாங்கள் அதை விட 10 ரன்கள் குறைவாக வழங்கியிருப்போம். இது தான் வித்தியாசத்தை ஏற்படுத்தியது.

என்ன நடந்தாலும் கவலையில்லை. இந்தியாவுக்காக உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம். இதற்காக என்னால் முடிந்த எல்லாவிதமான பங்களிப்பையும் வழங்கப்போகிறேன். நான் எப்போதுமே இந்திய அணியின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு வீரர். இந்தியாவுக்காக பங்கேற்கும் போது எப்போதுமே உற்சாகம் பிறக்கும். தற்போது எனக்கு கிடைத்துள்ள அன்பு, ஆதரவு எல்லாமே இந்திய அணி வீரர் என்ற அடிப்படையில் வந்தவை தான். அதனால் நீண்ட காலமோ, குறுகிய காலமோ இந்தியாவுக்காக உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். மற்ற எதை பற்றியும் கவலையில்லை.

கேப்டனாக ஐ.பி.எல். கோப்பையை வென்றிருப்பதால் இது இன்னும் கொஞ்சம் ‘ஸ்பெஷல்’ தான். இருப்பினும் நான் ஏற்கனவே வென்ற 4 ஐ.பி.எல். கோப்பையையும் (மும்பை அணிக்காக) இதே போன்று மிகவும் சிறப்பு வாய்ந்தவை தான். 5 ஐ.பி.எல். இறுதி போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வாகை சூடியதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.

இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.