ஈரான் நாட்டின் அச்சுறுத்தல் இருப்பதால் துருக்கி நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இஸ்ரேல் தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈரானின் கர்னல் ஹசன் சையத் கோடேய் தலைநகர் டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் ஈரானில் பரபரப்பு நிலவியது. இந்த கொலைக்கு காரணம் இஸ்ரேல் தான் எனவும், ஹசன் மரணத்திற்கு பதிலடி கொடுப்போம் என்றும் ஈரான் கூறியது.
Photo Credit: Reuters
அதனைத் தொடர்ந்து, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கியில் உள்ள இஸ்ரேல் மக்கள் மீது டெஹ்ரான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது.
மேலும், ஈரானின் அச்சுறுத்தலால் துருக்கி நாடு இஸ்ரேல் மக்களுக்கு ஆபத்தான நாடாக உருவாகியுள்ளது. எனவே இஸ்ரேல் மக்கள் யாரும் துருக்கிக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
Photo Credit: AP Photo/ Emrah Gurel/ File
அத்துடன் உலகெங்கிலும் உள்ள தனது மக்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. துருக்கி நாடானது இஸ்ரேலியர்களுக்கு ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. அது மட்டுமன்றி இரு நாடுகளுக்கும் இடையே இருந்த விரிசலை சரி செய்து வரும் இந்த வேளையில், இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதல்களை தூண்டியதற்காக டெஹ்ரான் முழு விலையையும் கொடுக்கும் என இஸ்ரேல் பிரதமர் நாப்தலி பென்னட் ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.