இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் : அருண் விஜய்
ஹரி இயக்கத்தில் அருண்விஜய் முதன் முறையாக இணைந்துள்ள படம் யானை. ஹரியின் வழக்கமான படங்கள் பாணியில் சென்டிமென்ட் ஆக்ஷன் கலந்த கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் கிராமத்து நாயகனாக நடித்துள்ள அருண் விஜய் பல காட்சிகளில் புகை பிடித்தபடி நடித்திருக்கிறார். இதுகுறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, இந்த படத்தின் காட்சிகளுக்கு தேவைப்பட்டதால் சில காட்சிகளில் புகை பிடித்தபடி நடித்திருக்கிறேன். ஆனபோதிலும் எதிர்காலத்தில் இதுபோன்ற காட்சிகளை தவிர்த்து விடுவேன் என்று கூறிய அருண் விஜய், இந்த படத்தில் பல அதிரடியான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில் ஒரு காட்சியில் நடித்தபோது எனக்கு உடம்பில் காயம் ஏற்பட்டது. என்றாலும் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொண்டு தொடர்ந்து நடித்தேன். இந்த யானை படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருந்தாலும் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய உணர்வுப்பூர்வமான காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளது. அதனால் அனைவரது மனதிலும் இடம் பிடிக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்கிறார் அருண்விஜய்.