இளையராஜாவுக்கு 80 வயது பூர்த்தி – திருக்கடையூரில் ஆயுள் விருத்தி ஹோமம்! இதன் சிறப்புகள் என்னென்ன?

பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா, தனக்கு 80 வயது பூர்த்தி ஆவதையொட்டி, திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீன பரிபாலனத்திலுள்ள இக்கோயிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இளையராஜா

மார்க்கண்டேயனுக்கு ‘என்றும் 16’ அருளிய தலமாதலால் இங்கு 60, 70, 75, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முறையே சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களைச் செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் பெறலாம் என்பது ஐதிகம்.

இத்தகைய சிறப்புமிக்கக் கோயிலுக்கு பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா வருகை புரிந்தார். தனக்கு 80 வயது பூர்த்தி அடைவதை முன்னிட்டு, ஆயுள் விருத்தி ஹோம பூஜைகள் செய்வதற்காக நேற்று (30.5.2022) திருக்கடையூருக்கு வந்தார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து சிவாசார்யார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கக்  கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோயில் கொடிமரத்தின் அருகே இளையராஜா கோ பூஜை, மற்றும் கஜ பூஜை செய்தார். தொடர்ந்து நூற்றுகால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மிருத்தியுஞ்சய ஹோமம், ஆயுஸ்ஹோமம், தன்வந்திரி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம் ஆகியவை நடைப்பெற்றன. இன்று காலையில குருபூஜை மற்றும் கனகாபிஷேகம் நடைபெற்றது. ராமலிங்க குருக்கள் தலைமையில் சிவாசார்யார்கள் இந்தப் பூஜைகளைச் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன் மற்றும் அவரது குடும்பத்தினர், பிரபல நடிகர் பிரேம்ஜி, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.