தெஹ்ரான்,
ஈரான் நாட்டின் தென்மேற்கே குஜஸ்தான் மாகாணத்தில் அபடான் நகரில் 10 அடுக்கு வர்த்தக கட்டிடம் ஒன்று இருந்தது. மெட்ரோபோல் என பெயரிடப்பட்ட இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளும் ஒருபுறம் நடந்து வந்துள்ளன.
பொதுமக்கள் அதிக அளவில் ஒன்றுகூட கூடிய தெருவில் அமைந்த இதனை சுற்றி வர்த்தகம் மற்றும் மருத்துவ வளாகங்களும், அலுவலகங்களும் செயல்பட்டு வந்துள்ளன.
இந்நிலையில், கட்டிடம் திடீரென கடந்த வாரம் இடிந்து விழுந்துள்ளது. இதில், இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். இதனை தொடர்ந்து, மீட்பு பணிகள் நடந்தன. இதுவரை 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என சரியாக தெரியவில்லை. எனினும், 35 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க கூடும் என கூறப்படுகிறது.
இந்த துக்க சம்பவத்தினை முன்னிட்டு பேரிடரில் உயிரிழந்த நபர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில், கடந்த ஞாயிற்று கிழமை ஈரான் அரசு நாடு முழுவதற்கும் இரங்கல் தெரிவிக்கப்படும் என அறிவித்தது.
கட்டிடம் இடிந்ததில் தொடர்புடைய கட்டிட உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.