நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, களுத்துறை, நுவரெலியா, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இதுபற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புளத்கொஹுபிட்டிய, வரக்காபொல ஆகிய நகரங்களுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, பிட்டபெத்தர ஆகிய பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கிரி-அல்ல, பெல்மடுல்ல, அயகம, நிவித்திகல ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு அபாயம் காணப்படுகிறது. இரத்தினபுரி மாவட்டத்தின் அலபாத்த, கலவான, குருவிட்ட, எஹலியகொட ஆகிய நகரங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு பற்றிய அறிகுறிகள் தென்படுமாயின் அங்குள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வது அவசியமாகும். இதுபற்றிய மேலதிக தகவல்களை 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
நாட்டின் பல்வேறு ஆறுகளினதும் நீர்மட்டம் அதிகரித்திருக்கிறது. மாதுலுஓயா, குடாகங்கை என்பனவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் பத்தேகம, வெலிவிட்ட, நியாமகம, நெலுவ, அக்மீமன, நாகொட, அல்பிட்டிய, போபே, போத்தல ஆகிய இடங்களின் தாழ்நிலப் பிரதேசங்களில் சிறு வெள்ளம் ஏற்படலாம். நில்வளா கங்கை – அளுத்கம – கல்ஹாகொட ஆகிய பகுதிகளில் பெருக்கெடுக்கலாம்.
குக்குலே கங்கை, தெதுறுஓயா ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் பிரதேச வாசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை,
நாட்டில் தற்சமயம் நிலவும் மழையினால் கடல் பிரதேசம் கொந்தழிப்பாக இருக்கும் எனவும் இதனால் கடலுக்குச் செல்வோர் எச்சரிக்கையாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.