ஒரு வேகத்தில் கெட்ட வார்த்தையை உதிர்த்த இயக்குனர் ஹரி
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹீரோக்களில் முக்கியமானவர் ஹரி. 'சாமி, சிங்கம்' என மாஸ் ஹீரோக்களின் சினிமாவை வேறு ஒரு திசைக்குக் கொண்டு சென்றவர். தற்போது தனது மைத்துனர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'யானை' படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜுன் 17ம் தேதியன்று இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. அதில் இயக்குனர் ஹரி, அருண் விஜய், பிரியா பவானி சங்கர் மற்றும் படத்தில் நடித்துள்ள பலரும் கலந்து கொண்டனர். பத்திரிகையார் சந்திப்பில் நிருபர் ஒருவர், யானைக்கு கோபமும் வரும், மதமும் பிடிக்கும். இந்தப் படத்திற்கு யானை எனப் பெயர் வைத்திருப்பதால் படத்தின் நாயகனுக்கு கோபம் வருகிறதா, மதம் பிடித்தவர் போல நடந்து கொள்கிறாரா எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குக் கொஞ்சம் எமோஷனலாகப் பதிலளித்தார் இயக்குனர் ஹரி. படத்தில் இருக்கும் ஆக்ஷன் காட்சிகளைப் பற்றிப் பேசும் போது ஹீரோ அடிப்பதைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஒரு வேகத்தில் கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்த்துவிட்டார். அந்த வார்த்தையைக் கேட்டதும் மேடையில் இருந்தவர்களுக்கும் எதிரில் இருந்தவர்களுக்கும் அதிர்ச்சியானது.
எல்லாரும் சிரிப்பதைப் பார்த்துவிட்டு இயக்குனர் ஹரி, “என்ன நான் மனசுல நினைச்சதை வெளிய சொல்லிடடேனா,” என சிரித்து சமாளித்துவிட்டார்.