கணவரின் காதலியிடம் சமாதானம் பேசுவதாக வீட்டிற்கு அழைத்து கூலிப்படையினரை ஏவி அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி கூலிப்படையினருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கோண்டாப்பூரை சேந்தவர் காயத்திரி. இவரது கணவர் ஸ்ரீகாந்த் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வருகின்றார்.
அதே பகுதியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த பெண் ஒருவருடன் ஸ்ரீகாந்துக்கு நட்பு ஏற்பட்டு அது நாளடைவில் திருமணம் கடந்த காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நிலை சரியில்லாத தனது மனைவி காயத்திரியை கவனித்துக் கொள்வதற்காக என்று கூறி தனது காதலியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் ஸ்ரீகாந்த். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த கணவரின் தோழியான அந்த பெண்ணை கோண்டாப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
அந்தப் பெண் அவர்களுக்கு வீட்டு வேலைகளை செய்வது போல ஸ்ரீகாந்துடன் ரகசிய காதலை வளர்த்துள்ளார்.
உடல் நிலை தேறிய நிலையில் தனது கணவருக்கும் அந்த பெண்ணுக்கும் தவறான தொடர்பு இருப்பது காயத்திரிக்கு தெரியவந்துள்ளது.
கணவரிடம் பலமுறை எச்சரித்தும் கேட்காததால், இருவரின் தவறான தொடர்பு குறித்து காயத்திரி ஏப்ரல் 24-ம் தேதி போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரும் உருப்படியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அந்த பெண்ணை பழிவாங்க முடிவு செய்த காயத்ரி 4 பேர் கொண்ட கூலிப்படையினரை அணுகி 2 லட்சம் ரூபாய் பேரம் பேசி அவர்களை அழைத்து வந்து தனது வீட்டின் ஒரி அறையில் தங்கவைத்துள்ளார்.
பின்னர் போலீசில் அளித்துள்ள புகாரை வாபஸ் பெறுவதாகவும், சமாதானம் பேசலாம் என்றும் கூறி கணவனின் காதலியை மீண்டும் வீட்டிற்கு கூட்டிச்சென்று கூலிப்படையினர் பதுங்கி இருந்த அறைக்குள் தள்ளிவிட்டுள்ளார்.
கூலிப்படையினர் 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை காயத்திரி தனது செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
நடந்த சம்பவத்தை வெளியே யாரிடமாவது தெரிவித்தாலோ, தனது கணவரிடம் மீண்டும் பேசினாலோ இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என அந்த பெண்ணை மிரட்டிய காயத்திரி வீட்டில் இருந்து விரட்டி விட்டு உள்ளார்.
கூலிப்படையினர் தாக்கியதில் பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் படி காயத்திரி மற்றும் ரவுடிகள் 4 பேரை போலீசார் பலாத்கார வழக்கில் கைது செய்தனர்.
இடம் மாறிய கணவனை கண்டிக்காமல், தடம் மாறிய கணவனின் காதலியை தண்டித்த காரணத்தால் காயத்திரி கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.