கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை கூலிப்படையை வைத்து பாலியல் வன்கொடுமை செய்த மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த கோண்டாபூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவரது கணவர் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு படித்து வந்துள்ளார். அவர் வசித்த அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இந்தத் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.
இது காயத்ரியின் கவனத்துக்கு வந்ததும், அவர் இருவரையும் எச்சரித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். இருப்பினும், அவருக்கு ஆத்திரம் தீரவில்லை. அதனால், அந்தப் பெண்ணைப் பழிவாங்க முடிவுசெய்த காயத்ரி, புகாரைத் திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்கலாம் எனக்கூறி அந்தப் பெண்ணை கடந்த 26ஆம் தேதி தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார். சிறிது நேரம் காயத்ரி அவருடன் வழக்கு தொடர்பாக பேசிவிட்டு, பின்னர் அந்தப் பெண்ணை அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அந்த அறையில் ஏற்கெனவே நான்கு கூலிப்படை ஆட்கள் இருந்தனர். அவர்கள் அந்தப் பெண்ணின் வாயை துணியால் பொத்தி, அவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதை காயத்ரி தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியுள்ளார்.
பலத்த காயம் அடைந்த அந்தப் பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய காயத்ரி உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்: கோவை: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் தீர்ப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM