புதுடெல்லி: கரோனா தொற்றுக்குப் பிறகு பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற அமைப்பு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு, விலைவாசி, வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு காரணிகளை வைத்து ஆய்வு நடத்தியது. அதில் தெரிய வந்த முடிவுகளை அந்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பல்வேறு திட்டங்களை அமல்படுத்தும் விதம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது விலைவாசி உயர்ந்து வந்த நிலையிலும், வேலைவாய்ப்பு பிரச்சினை நிலவினாலும் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் மோடி அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்றுக்குப் பிறகு மோடியின் செல்வாக்கு எதிர்பார்த்த அளவு அல்லது அதற்கு மேலாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
லோக்கல் சர்க்கிள்ஸ் கருத்துக்கணிப்பில் வாக்களித்த 64,000 பேரில், 67 சதவீதம் பேர் கருத்துப்படி, பிரதமர் மோடியின் 2-வது ஆட்சி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறது அல்லது அதற்கு மேலாகவும் இருப்பதாக உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு கரோனா தொற்று ஆரம்பித்த பிறகு இது 62 சதவீதமாக இருந்தது. ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு கரோனா 2-வது அலை ஏற்பட்ட போது மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்தது, உயிரிழப்பு அதிகரித்தது போன்ற காரணங்களால் 51 சதவீதமாக இருந்தது. அந்த 2 ஆண்டுகளை விட தற்போது பிரதமர் மோடியின் செல்வாக்கு, புகழ் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தயார் நிலையில் இருந்தது. அதேநேரத்தில் திறம்பட பொருளாதாரத்தையும் சமாளித்தது என்று ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் வேலைவாய்ப்பின்மை 7 சதவீதமாக இருப்பது கவலை அளிப்பதாக கூறியுள்ளனர்.
இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று 47 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேநேரத்தில் வேலை வாய்ப்பின்மை பிரச்சினைக்கு அரசு தீர்வு காணும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்த நம்பிக்கை கடந்த 2020-ல் 29 சதவீதமாகவும், 2021-ல் 27 சதவீதமாகவும் இருந்தது. தற்போது அந்த நம்பிக்கை 37 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவில்லை என்று 73 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்காலம் மற்றும் தங்கள் குடும்பத்தின் எதிர்காலம் குறித்த விஷயத்தில் 73 சதவீதம் பேர் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியுள்ளனர். காற்றுமாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று 44 சதவீதம் கூறியுள்ளனர்.
மத நல்லிணக்கம் மேம்பட மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று 60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், மத நல்லிணக்க விஷயத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று 33% பேர் கூறியுள்ளனர். தவிர இந்தியாவில் தொழில் தொடங்குவது மிக எளிமையாகி இருக்கிறது என்று 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கூறியுள்ளனர். இவ்வாறு லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.