புதுச்சேரி : ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சி கலங்கரை விளக்காக இருந்தது என, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் நம்பிக்கை பெற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரி ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று மாணவர்கள் திரளாக வந்து கருத்தரங்கில் பங்கேற்று குறிப்புகள் எடுத்தனர். ஒவ்வொரு அமர்வு முடிந்த பிறகும் நேரடியாக கல்வியாளர்களை அணுகி விளக்கம் பெற்றனர்.
மாணவர்கள் பகிர்ந்தவை:
ஆதம்கனி, விழுப்புரம்: அடுத்து என்ன படிப்பது, எங்கு படிப்பது என கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்த பிறகு, உயர் கல்வியில் இத்தனை படிப்புகள் உள்ளதா என்பதை அறிந்து மலைத்துப் போய்விட்டேன். ‘தினமலர்’ நாளிதழுக்கு நன்றி
யாமினி, பூமியான்பேட்டை, புதுச்சேரி: வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் உள்ளது. இங்கு உயர்கல்வி பற்றி சொல்வதுடன் நின்று விடாமல், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் ஊட்டுகின்றனர். இது என்னைப் போன்ற மாணவர்கள் சரியான திசையில் செல்ல கலங்கரை விளக்காக வழிகாட்டுகிறது. இந்த வாய்ப்பை மாணவர்கள் தவற விடக் கூடாது.
மோகன்குமார், புதுச்சேரி: லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறேன். எதிர்கால கல்வி போக்குகளை அறிந்து கொள்ள வந்தேன். மிகவும் உதவியாக இருந்தது. வழிகாட்டி நிகழ்ச்சியில் பொது அறிவு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து டேப்லெட் பரிசாக பெற்றது வாழ்வில் மறக்க முடியாதது.வழிகாட்டி நிகழ்ச்சியில் எந்த மாதிரியான படிப்புகள் படித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன். அதற்கான அடித்தள பயணத்தை பிளஸ் 2 வகுப்பில் இருந்தே எடுக்க உள்ளேன்.
ஹர்ஷன், புதுச்சேரி:வழிகாட்டி நிகழ்ச்சியில் மருத்துவம், பொறியியல், கலை – அறிவியல் என அனைத்து கல்வி நிறுவன அரங்குகளும் ஒரே குடையின் கீழ் இருந்ததால், அனைத்து தகவல்களையும் அலைச்சல் இல்லாமல் பெற முடிந்தது. உயர் கல்வி குறித்து தெளிவான முடிவுக்கு வர முடிந்தது.
Advertisement