நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் தற்போது காலியாக இருக்கும் 57 உறுப்பினர்களுக்கான தேர்தல், வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. மேலும், தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. இதுவொருபுறமிருக்க, காங்கிரஸ் கட்சியிலிருந்து சில தலைவர்கள், காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலால் சொந்தக் கட்சி மீதே தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரான ஆச்சார்யா பிரமோத்தும், காங்கிரஸின் ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இடம்பெறாததையடுத்து, காங்கிரஸ்மீதான தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆச்சார்யா பிரமோத், “நான் ஒருபோதும் ராஜ்யசபா போட்டியில் இல்லை. ஆனால், காங்கிரஸில் ‘இந்து’, ‘மதம்’ ஆகிய வார்த்தைகளை வெறுக்கும் தலைவர்கள் சிலர் இருக்கின்றனர்.
அவர்கள் அத்தகைய வார்த்தைகளையே வெறுக்கிறார்கள் என்றால், அவர்கள் எப்படி ஓர் இந்துவை ராஜ்ய சபா தேர்தலுக்கு அனுப்ப முடியும்… கட்சியை வலுப்படுத்துபவர்களை மேலவைக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் கட்சியை அழிக்கிறவர்களை அங்கு அனுப்பி என்ன பயன்… ஆனாலும், நான் இன்னும் காங்கிரஸுடன்தான் நிற்கிறேன்” என்று கூறினார்.
மேலும் கட்சித் தலைமை குறித்துப் பேசிய ஆச்சார்யா பிரமோத், “ராகுல் காந்தி பதவியை ஏற்கவில்லையென்றால் இளைஞர்கள், கட்சியில் அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களைக் கையாளவும்… ஒருங்கிணைக்கவும் ஒரு முகம் தேவை. பலரின் கருத்துப்படி அந்த முகம் பிரியங்கா காந்தி” எனக் கூறினார்.