ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தியதால் பிரபலமாகி, சமீபத்தில் காங்.,கில் இருந்து விலகிய ஹர்திக் படேல் நாளை பா.ஜ.,வில் இணைகிறார்.குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2015ல் பதிதார் எனப்படும் படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து, கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஹர்திக் படேல் போராட்டம் நடத்தினார்.
இதில் வெடித்த வன்முறையில், ஒரு போலீஸ்காரர் உட்பட, 10 பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து, பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து வந்த ஹர்திக் படேல், 2019 லோக்சபா தேர்தலுக்கு முன் காங்.,கில் இணைந்தார். அவருக்கு குஜராத் மாநில செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் ஹர்திக் படேல், சமீப காலமாக காங்., தலைமையை விமர்சித்தும், பா.ஜ., திட்டங்களை பாராட்டி பேசியும் வந்தார். கடந்த மாதம், அவர் காங்.,கில் இருந்து விலகினார்.
இந்நிலையில், நாளை ஹர்திக் படேல், குஜராத் மாநில பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் ரகுநாத் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைய உள்ளார். குஜராத் சட்டசபை தேர்தல் இந்தாண்டு நடக்க உள்ளது. ஹர்திக் படேலின் வருகை, பா.ஜ.,வுக்கு வலிமை சேர்க்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் படேல் மீது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்குகள் வாபஸ் பெறப்படும் என, தெரிகிறது. குஜராத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.,ஆட்சி நடக்கிறது. அதை தக்க வைத்துக் கொள்ள, எதிர்ப்பாளர்களையும் பா.ஜ, சேர்த்து வருகிறது.
Advertisement